பஸ்சில் பயணம் செய்த முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்..!


பஸ்சில் பயணம் செய்த முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார்..!
x

கர்நாடகத்தில் அரசு பஸ்களில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா இன்று தொடங்கி வைத்தார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் வெற்றி பெற்றால் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், 10 கிலோ ரேஷன் அரிசி, வேலையில்லா பட்டதாரிகளுக்கு தலா மாதம் ரூ.3 ஆயிரம் மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு தலா ரூ.1,500, பெண்களுக்கு மாதம் தலா ரூ.2 ஆயிரம் ஆகிய 5 இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தது.

அதன்படி, காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்திருப்பதால், 5 இலவச திட்டங்களையும் அமல்படுத்த முதல்-மந்திரி சித்தராமையா தலைமையிலான நடந்த மந்திரிசபை கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதையடுத்து, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் ஜூன் 11-ந் தேதி (அதாவது இன்று) முதல் தொடங்கப்படும் என்று முதல்-மந்திரி சித்தராமையா அறிவித்திருந்தார்.

அதன்படி, அரசு பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. சக்தி திட்டத்தை முதல்-மந்திரி சித்தராமையா தொடங்கி வைத்தார். காங்கிரஸ் அரசின் முதல் திட்டம் என்பதால், இந்த தொடக்க விழா பெங்களூரு விதானசவுதா வளாகத்தில் கோலாகலமாக நடந்தது. பஸ்களில் இலவசமாக பயணம் செய்யும் சக்தி திட்டத்தை தொடங்கி வைத்து அவர்களுடன் அம்மாநில முதல்-மந்திரி சித்தராமையா மற்றும் துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேருந்தில் பயணம் செய்தனர்.

கர்நாடகத்தில் எந்த பகுதியில் இருந்தும், எங்கு வேண்டுமானாலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். ஒரு நாளுக்கு எத்தனை முறை வேண்டுமானாலும் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளலாம். கர்நாடகத்திற்குள் மட்டுமே இந்த இலவச பயணம் மேற்கொள்ள முடியும். கர்நாடகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு செல்லும் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது. கர்நாடகத்தில் வசிக்கும் பெண்களுக்கு மட்டுமே சக்தி திட்டம் பொருந்தும். வெளிமாநிலங்களில் இருந்து பெங்களூரு உள்பட மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு வரும் பெண்கள் கர்நாடக அரசின் பஸ்களில் இலவச பயணம் மேற்கொள்ள முடியாது.


Next Story