முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை இன்று சிக்கமகளூரு வருகை
- கொப்பாவில் நடக்கும் ஜனசங்கல்ப யாத்திரையில் பங்கேற்பதற்காக இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்கமகளூரு வருகிறார். மங்களூருவில் நடந்த குண்டுவெடிப்பை தொடா்ந்து உச்சகட்ட பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
சிக்கமகளூரு-
இன்று சிக்கமகளூரு வருகை
கர்நாடக சட்டசபைக்கு அடுத்த ஆண்டு (2023) தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் தீவிர பிரசாரம் நடத்தி வருகிறார்கள். பா.ஜனதாவினர் ஜனசங்கல்ப யாத்திரை என்ற பெயரில் பிரசாரத்தை தொடங்கி உள்ளனர். முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா ஆகியோர் மாநிலத்தில் பல பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிக்கமகளூரு மாவட்டம் கொப்பாவில் ஜனசங்கல்ப யாத்திரை நடக்க உள்ளது. இதில், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, எடியூரப்பா உள்பட பலர் கலந்துகொள்ள உள்ளனர்.
ஜனசங்கல்ப யாத்திரை
இன்று காலை 9.40 மணிக்கு பெங்களூரு எச்.ஏ.எல். விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சிக்கமகளூரு மாவட்டம் கொப்பா தாலுகா ஹரிஹரபுராவில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடில் வந்திறங்குவார். பின்னர் அங்கிருந்த கார் மூலம் கொப்பா அரசு பள்ளியில் நடக்கும் ஜனசங்கல்ப யாத்திரையில் கலந்துகொள்வார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் காலை 11.40 மணிக்கு அங்கிருந்து சிவமொக்கா மாவட்டம் தீர்த்தஹள்ளிக்கு செல்கிறார். அங்கு அரசு பள்ளி புதிய கட்டிடம் திறப்பு விழாவில் கலந்துகொள்கிறார். பின்னர் விவசாயிகளை சந்தித்து அவர் குறைகளை கேட்க உள்ளார். பின்னர் மாலையில் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பெங்களூருவுக்கு திரும்பி செல்கிறார்.
உச்சகட்ட பாதுகாப்பு
முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்கமகளூரு வருகையையொட்டி உச்சகட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கடந்த 19-ந்தேதி முதல்-மந்திரி மங்களூரு சென்றிருந்தபோது குண்டுவெடிப்பு சம்பவம் அரங்கேறியது. இதனால், சிக்கமகளூரு மாவட்டத்தில் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் ஜனசங்கல்ப யாத்திரைக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு உமா பிரசாந்த் தெரிவித்துள்ளார்.