கர்நாடகாவில் அரசு ஊழியர்களுக்கு 17% சம்பள உயர்வு முதல்-மந்திரி அறிவிப்பு : காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் என அறிவிப்பு
அரசு எங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டதை அடுத்து நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று கொண்டோம் என கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஷடக்சரி கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக அரசு ஊழியர்கள் சம்பள உயர்வு கோரி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 17 சதவீதத்தை உயர்த்துவதாக அரசு அறிவித்துள்ளது. அதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை ஏற்று அரசு ஊழியர்கள் தங்களின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற்றுள்ளனர். ஆனால் பெங்களூரு விதான சவுதா ஊழியர்கள் சங்க தலைவர் குருசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
கர்நாடக அரசு 17 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது. இதை கா்நாடக அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஷடக்சரி ஏற்று கொண்டுள்ளார். அவர் ஒருதலைபட்சமாக இந்த முடிவை எடுத்துள்ளார். இடைக்கால நிவாரணமாக 40 சதவீத சம்பளம் உயர்த்த வேண்டும் என்று நாங்கள் கோரினோம். ஆனால் அரசு 17 சதவீத உயர்வு மட்டுமே வழங்குவதாக அரசு கூறியுள்ளது. இதையும் வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அமல்படுத்துவதாக அரசு கூறியுள்ளது. இதை முன்தேதியிட்டு அமல்படுத்தி இருக்க வேண்டும்.
கர்நாடக அரசின் இடைக்கால சம்பள உயர்வு எனக்கு திருப்தி அளிக்கவில்லை. குறைந்தபட்சம் 25 சதவீதமாவது உயர்த்தி இருக்க வேண்டும். கர்நாடக அரசு வேலை நிறுத்தத்தை முடக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கண்துடைப்புக்காக 17 சதவீத சம்பள உயர்வு வழங்கியுள்ளது. எங்களின் முக்கியமான கோரிக்கை, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது.
அரசு ஒரு குழுவை அமைப்பதாக கூறியுள்ளது. ஏற்கனவே அரசு அமைத்த குழு என்ன ஆனது?. அரசின் அழுத்தத்திற்கு பணிந்து ஷடக்சரி ஒருதலைபட்சமாக முடிவு எடுத்துள்ளார். வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து எங்களுடன் கலந்து ஆலோசிக்கவில்லை.
இவ்வாறு குருசாமி கூறினார்.
கர்நாடக அரசு ஊழியர்கள் சங்க தலைவர் ஷடக்சரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரசு ஊழியர்கள் 7-வது ஊதிய குழுவிடம் இடைக்கால அறிக்கை பெற்று 40 சதவீத சம்பள உயர்வு உடனடியாக வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டுவர வேண்டும் என்று கோரி 1-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டோம். மாநில அரசு, எங்களுக்கு 17 சதவீத சம்பள உயர்வு வழங்குவதாக அறிவித்துள்ளது. மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த அரசு ஒரு குழுவை அமைத்துள்ளது.
அந்த குழு பிற மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ள பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து ஆய்வு நடத்தி அறிக்கை வழங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது. அரசு எங்களின் முக்கிய கோரிக்கைகளை ஏற்று கொண்டதை அடுத்து நாங்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெற்று கொண்டோம். இந்த போராட்டத்தை வெற்றி பெற வைத்த ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.
இவ்வாறு ஷடக்சரி தெரிவித்துள்ளார்.