சத்தீஷ்காரில் பள்ளி குழந்தைகள் சண்டையில் இளைஞர் படுகொலை: ஒரு நாள் பந்த்; 144 தடை உத்தரவால் பரபரப்பு


சத்தீஷ்காரில் பள்ளி குழந்தைகள் சண்டையில் இளைஞர் படுகொலை:  ஒரு நாள் பந்த்; 144 தடை உத்தரவால் பரபரப்பு
x

சத்தீஷ்காரில் இளைஞர் படுகொலையை அடுத்து பா.ஜ.க., வி.எச்.பி. மற்றும் இந்து அமைப்புகள் ஒரு நாள் பந்துக்கு அழைப்பு விடுத்து, கடைகளை மூட கோரி வாகன பேரணி சென்றனர்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்காரில் பெமதரா நகரில் இருந்து 60 கி.மீ. தொலைவில் அமைந்த பிரான்பூர் கிராமத்தில் பள்ளி குழந்தைகள் இடையே கடந்த சனிக்கிழமை மோதல் ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து ஏற்பட்ட சண்டையில் புவனேஸ்வர் சாஹூ (வயது 23) என்ற இளைஞர் படுகொலை செய்யப்பட்டார்.

இதனால் வன்முறை பரவியது. 800-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்புடன் நேற்று இளைஞர் இறுதி சடங்கு நடந்தது. இதன்பின் வன்முறை பரவாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில், பா.ஜ.க. மற்றும் விஷ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் இன்று ஒரு நாள் முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.

இதுபற்றி ராய்ப்பூரின் கூடுதல் எஸ்.பி. அபிஷேக் மகேஷ்வரி கூறும்போது, வி.எச்.பி. மற்றும் இந்து அமைப்புகள் ஒரு நாள் பந்துக்கு அழைப்பு விடுத்திருக்கின்றனர். 400-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

சட்டம் மற்றும் ஒழுங்கு விவகாரம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் 3 முதல் 4 இடங்களில் சாலை மறியலில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர் என தகவல் தெரிய வந்து உள்ளது. அவர்களை உடனடியாக கலைந்து போக செய்வோம் என்று கூறியுள்ளார்.

இதேபோன்று பஸ் ஒன்று, இன்று காலை நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது அடித்து நொறுக்கப்பட்டது. வி.எச்.பி. தொண்டர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர் என கூறப்படுகிறது.

இந்த முழு அடைப்பை முன்னிட்டு, வி.எச்.பி. அமைப்பினர் ராய்ப்பூர் நகரில், வாகனங்களில் பேரணியாக இன்று சென்று, பந்துக்கு ஆதரவளிக்கும் வகையில், கடைகளை அடைக்கும்படி கூறி வலியுறுத்தியபடி சென்றனர்.-


Next Story