பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு


பிரதமர் மோடி விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

தினத்தந்தி 22 Sept 2023 5:09 AM IST (Updated: 22 Sept 2023 5:22 AM IST)
t-max-icont-min-icon

கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு அள்ளிக்கொடுக்கும் பிரதமர் மோடி, விலைவாசி உயர்வு குறித்து வாய் திறப்பதில்லை என்று பிரியங்கா காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கார் மாநிலத்தின் துர்க் மாவட்டத்தில் உள்ள பிலாய் நகரில் காங்கிரஸ் மகளிர் அணியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:-

யஷோபூமிக்கு ஆயிரக்கணக்கான கோடிகள் செலவிடப்படுகின்றன. புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டுவதில் ரூ.20,000 கோடி செலவிடப்பட்டது. பிரதமர் பயணம் செய்வதற்காக வாங்கப்பட்டுள்ள 2 விமானங்களின் மொத்த மதிப்பு ரூ.16,000 கோடி. ஆனால் பரிதாபமான சாலைகள், வேலையின்மை மற்றும் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு குறித்து அவரால் பதிலளிக்க முடியாது.

மத்திய அரசு ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களிடம் இருந்து பறித்ததை, பிரதமரின் கார்ப்பரேட் கூட்டாளிகளுக்கு பகிர்ந்தளிக்கிறது. அதன்படி பொதுத்துறை நிறுவனங்கள், துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் போன்ற அனைத்து பொதுச்சொத்துகளும் பிரதமரின் தொழிலதிபர் நண்பர்களிடம் ஒப்படைக்கப்பட்டன.

நாட்டின் விவசாயிகளின் சராசரி வருமானம் நாளொன்றுக்கு ரூ.27 ஆக உள்ளது, அதே நேரத்தில் மோடியின் தொழிலதிபர் நண்பர் ஒரே நாளில் ரூ.1,600 கோடியை ஈட்டியுள்ளார்.

விலைகள் மிக அதிகமாக இருப்பதால், என் சகோதரிகளின் தோள்களில் அதிக சுமை உள்ளது. சந்தைக்கு செல்லும் பெண்கள் திட்டமிட்டதில் பாதியை கூட வாங்க முடியாமல் திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.

இவ்வாறு பிரியங்கா காந்தி கூறினார்.


Next Story