சத்தீஸ்காரில் 7ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்திற்கு சவால் நிறைந்த 12 தொகுதிகள்


சத்தீஸ்காரில் 7ம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு: தேர்தல் ஆணையத்திற்கு சவால் நிறைந்த 12 தொகுதிகள்
x

வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

ராய்ப்பூர்:

சத்தீஸ்கார் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படுகிறது. மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் 20 தொகுதிகளில் 7ம் தேதியும், மீதமுள்ள 70 தொகுதிகளில் 17ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தலில் 223 வேட்பாளர்களும், இரண்டாம் கட்ட தேர்தலில் 958 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

முதற்கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் 3 நாட்களே உள்ள நிலையில், தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.

தேர்தல் நடைபெறும் 20 தொகுதிகளில் 12 தொகுதிகள், நக்சலைட்டுகள் அதிகம் உள்ள பஸ்தார் பிரிவில் உள்ளன. எனவே, இந்த தொகுதிகளில் வாக்குப்பதிவு நடத்துவது தேர்தல் ஆணையத்திற்கும், பாதுகாப்பு படையினருக்கும் சவாலான ஒன்றாகும். இந்த சவால்களுக்கு மத்தியிலும் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்தலை புறக்கணிப்பதாக மாவோயிஸ்டுகள் அறிவித்துள்ளதால் அசம்பாவிதம் நடக்காமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

பஸ்தார் பிரிவில் நக்சல்களால் கடுமையாக பாதிக்கப்பட்ட 40 கிராமங்களில், 40 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. இந்த கிராமங்களில் 126 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, சந்த்மேத்தா என்ற கிராமத்தில், சுதந்திரத்திற்கு பிறகு முதல் முறையாக வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, நக்சலைட்டுகளின் கட்டுப்பாட்டில் இந்த கிராமங்கள் இருந்ததால் பாதுகாப்பு காரணங்கள் மற்றும் சிக்கலான புவியியல் அமைப்பு காரணமாக 40 ஆண்டுகளாக வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவில்லை. பல கிலோ மீட்டர் தொலைவில் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. இருப்பினும் நக்சலைட்டுகளின் மிரட்டல் காரணமாக மக்கள் வாக்களிக்க முடியவில்லை.

இப்போது நிலைமை மாறியிருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளில் பஸ்தார் பிரிவின் உட்புற பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படை முகாம்கள் அமைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. சாலை வசதி செய்யப்பட்டுள்ளது. அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதனால் நக்சலைட்டுகள் நடமாட்டம் கட்டுக்குள் உள்ளது.


Next Story