பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4-க்கு கொள்முதல் செய்யும் திட்டம் - சத்தீஸ்கர் முதல் மந்திரி தொடங்கி வைத்தார்


பசுவின் கோமியம் லிட்டர் ரூ.4-க்கு கொள்முதல் செய்யும் திட்டம் - சத்தீஸ்கர் முதல் மந்திரி தொடங்கி வைத்தார்
x

Image Courtesy : PTI 

பசுவின் சாணத்தில் இருந்து உரம் போன்றவை தயாரிக்கப்பட்டு, 143 கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது.

ராய்ப்பூர்,

'கோதன் நியாய் யோஜனா' திட்டத்தின் சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு பசுவின் கோமியத்தை லிட்டர் 4 ரூபாய்க்கு கொள்முதல் செய்யும் திட்டத்தை மாநில முதல் மந்திரி பூபேஷ் பாகேல் இன்று தொடங்கி வைத்தார்.

திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல் மந்திரி பூபேஷ் பாகேல் கூறுகையில், "மாட்டு சாணம் கொள்முதல் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டதை அடுத்து கோமியத்தை கொள்முதல் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த கோமியம் பூச்சிக் கட்டுப்பாட்டுப் பொருட்கள் மற்றும் திரவ கரிம உரம் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும்" என தெரிவித்தார்.

முதல் கட்டமாக ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு கால்நடை காப்பகங்கள் மூலம் பசுவின் கோமியத்தை அரசு கொள்முதல் செய்ய இருக்கிறது. பசுவின் கோமியத்தை குறைந்தபட்சம் லிட்டருக்கு ரூ.4 கொடுத்து வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே சத்தீஸ்கர் அரசு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஜூலை 2020 இல் ஹரேலி திருவிழாவில் 'கோதன் நியாய் யோஜனா' திட்டத்தை தொடங்கியது. இதன் கீழ் மண்புழு உரம் தயாரிக்க பசுவின் சாணத்தை ஒரு கிலோவுக்கு இரண்டு ரூபாய்க்கு அரசு கொள்முதல் செய்து வருகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளில், மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம், 20 லட்சம் குவிண்டால்களுக்கு மேல் மண்புழு உரம், சூப்பர் கம்போஸ்ட், சூப்பர் பிளஸ் உரம் ஆகியவை பசுவின் சாணத்தில் இருந்து தயாரிக்கப்பட்டு, 143 கோடி ரூபாய் வருவாய் அரசுக்கு கிடைத்துள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ், 150 கோடி ரூபாய்க்கு மேல் மாட்டு சாணம் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.


Next Story