கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா


கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா
x

மகா சிவராத்திரியையொட்டி கோலார் தங்கவயல் அருகே உள்ள கோடி லிங்கேஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா நடந்தது. இன்று(ஞாயிற்றுக்கிழமை) 108 அடி உயர சிவலிங்கத்திற்கு பால் அபிஷேகம் நடக்கிறது.

கோலார் தங்கவயல்:-

கோடி லிங்கேஸ்வரர் கோவில்

கோலார் மாவட்டம் கோலார் தங்கயவல் அருகே கம்மசந்திரா கிராமத்தில் கோடி லிங்கேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் உலகம் முழுவதும் பிரசித்திப் பெற்றுள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரி வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்த நிலையில் நேற்று சிவராத்திரியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் வண்ணன மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தேரில் லிங்கேஸ்வரர் எழுந்தருளினார்.

அவருக்கு திரளான பக்தர்கள் முன்னிலையில் கோவில் நிர்வாகி குமாரி சுவாமி தலைமையில் முன்னாள் மத்திய மந்திரி கே.எச்.முனியப்பா, ரூபா கலா சசிதர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட பலர் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். அதை தொடர்ந்து லிங்கேஸ்வரர் கோவில், சீதாராமர், ஆஞ்சநேயர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில் வளாகத்தில் பல்வேறு இடங்களில் பக்தர்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற அன்னதானம், பானகம், மோர் ஆகியவற்றை வழங்கினார்கள்.

108 அடி உயர லிங்கம்

கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இன்றும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கோடி லிங்கங்களின் பிரதானமாக உள்ள 108 அடி லிங்கத்திற்கு இன்று(ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி அளவில் பால் அபிஷேகம் நடக்க இருக்கிறது. இந்த காட்சியை காண பல்வேறு மாநிலங்கங்களில் இருந்து பக்தர்கள் வந்து அங்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இன்று கோவில் வளாகத்தில் காலை முதல் மாலை வரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story