வீராங்கனைகளின் பாலியல் புகார்: மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை - டெல்லி போலீசார் தாக்கல்
வீராங்கனைகளின் பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த சம்மேளன தலைவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் பிரிஜ்பூஷன் சிங் மீது பிரபல மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் கூறி போராட்டம் நடத்தி வந்தனர். இந்த புகார் தொடர்பான விசாரணையை 15-ந்தேதிக்குள் (நேற்று) முடித்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என மத்திய மந்திரி அனுராக் தாகூர் அளித்த வாக்குறுதியை தொடர்ந்து இந்த போராட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பிரிஜ்பூஷன் சிங்குக்கு எதிராக டெல்லி போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சுமார் 1,500 பக்கங்களை கொண்ட இந்த குற்றப்பத்திரிகையில் பாலியல் குற்றச்சாட்டு சார்ந்த பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
மேலும் 6 வீராங்கனைகளின் விரிவான வாக்குமூலம், சாட்சிகளின் வாக்குமூலங்களும் அடங்கியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். குறிப்பாக, நேரில் கண்ட சாட்சிகள், போட்டிகளின் பிற பங்கேற்பாளர்கள், நடுவர்கள் மற்றும் பணியாளர்களின் வாக்குமூலங்களும் குற்றப்பத்திரிகையில் அடங்கியுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த வழக்கு தொடர்பான சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள் கிடைத்தவுடன் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்றும் போலீசார் கூறியுள்ளனர்.