கர்நாடக சட்டசபையில் கூச்சல்-குழப்பம்


கர்நாடக சட்டசபையில் கூச்சல்-குழப்பம்
x

பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதையடுத்து முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்பட பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

பெங்களூரு:-

கர்நாடக சட்டசபை தேர்தலில் 135 தொகுதிகளில் வெற்றிபெற்று காங்கிரஸ் ஆட்சியை பிடித்தது.

கவர்னர் உரை

அதையடுத்து சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. கர்நாடகத்தில் புதிய அரசு அமைந்த நிலையில் சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 3-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாளில் இரு சபைகளின் கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் உரையாற்றினார்.

அதைத்தொடர்ந்து கடந்த 7-ந் தேதி முதல்-மந்திரி சித்தராமையா பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 9-வது நாள் கூட்டம் நேற்று காலை விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் நடந்தது. அப்போது முதல்-மந்திரி சித்தராமையா பதிலளித்தார்.

விசாரணை நடத்துங்கள்

அப்போது பா.ஜனதாவைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசும்போது கூறியதாவது:-

நாங்கள் ஆட்சியில் இருந்தபோது பழிவாங்கும் அரசியல் செய்யவில்லை. உங்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து லோக்அயுக்தா விசாரணை நடத்துகிறது. விசாரணையில் அனைத்து உண்மைகளும் வெளிவரும். பா.ஜனதா ஆட்சியின் ஊழல்கள் குறித்து சித்தராமையா பேசுகிறார். எங்கள் ஆட்சியில் ஊழல் நடந்திருந்தால் அதுகுறித்து விசாரணை நடத்துங்கள். ஆட்சி அதிகாரம் உங்களிடம் உள்ளது.

வித்தியாசம் இல்லை

நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. எங்களுக்கு எந்த பயமும் இல்லை. முன்பு உங்கள் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்களையும் சேர்த்து விசாரணை நடத்துங்கள். கடந்த 2007-ம் ஆண்டு சித்தராமையா ஜனதா தளம்(எஸ்) கட்சியை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்தார். அப்போது இருந்து தான் கட்சி தாவல் தொடங்கியது. அதே போல் 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவில் சேர்ந்தனர். அவர்களுக்கும், நீங்கள் கட்சி மாறியதற்கும் எந்த வித்தியாசமும் இல்லை.

கடந்த 2013-ம் ஆண்டு நீங்கள் சிறப்பான ஆட்சி நடத்தியதாக கூறினீர்கள். ஆனால் ஆட்சி அதிகாரத்தை இழந்தீர்கள். கர்நாடகத்தில் கடந்த 35 ஆண்டுகளாக ஒரே கட்சி தொடர்ச்சியாக 2 முறை வெற்றி பெற்றது இல்லை. அந்த அடிப்படையில் நீங்கள் இந்த முறை வெற்றி பெற்றுள்ளீர்கள். உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கர்நாடகத்தில் ஏழை மக்களுக்கு மத்திய அரசு தலா 5 கிலோ அரிசி வழங்குகிறது.

யாரிடம் பேச வேண்டும்

அரிசி வழங்குமாறு அதிகாரியிடம் போய் கேட்டால் கிடைக்குமா?, அவருக்கு அந்த அதிகாரம் உள்ளதா?. அரிசி வேண்டுமெனில் யாரிடம் பேச வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு கூட இந்த அரசுக்கு இல்லை.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.

மேலும் இந்த விவாதத்தில் காங்கிரஸ் உறுப்பினர் கோனரெட்டி பேசும்போது கூறியதாவது:-

கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசு 5 உத்தரவாத திட்டங்களை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் மக்களுக்கு அளித்த வாக்குறுதிப்படி நடந்து கொண்டுள்ளது. முந்தைய பா.ஜனதா அரசு தேர்தலின்போது மக்களுக்கு அளித்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை. ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி கூறினார். இதுவரை அந்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.

இவ்வாறு கோனரெட்டி கூறினார்.

கருப்பு பணத்தை...

அப்போது பா.ஜனதா உறுப்பினர்கள் இதற்கு ஆட்சேபனை தெரிவித்தனர். பா.ஜனதா உறுப்பினர் பசனகவுடா பட்டீல் யத்னால் பேசும்போது, 'ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி எங்கும் கூறவில்லை. அவ்வாறு அவர் கூறி இருந்தால் அதற்கு ஒரு ஆதாரத்தை ஆவது நீங்கள் வழங்க வேண்டும். வெளிநாடுகளில் உள்ள கருப்பு பணத்தை கொண்டு வந்து வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்துவதாக தான் அவர் கூறினார்' என்றார்.

அதற்கு மந்திரிகள் கே.எச்.ராஜண்ணா, கே.ஜே.ஜார்ஜ் ஆகியோர் ஆட்சேபனை தெரிவித்தனர். அப்போது காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா உறுப்பினர்கள் இடையே சிறிது நேரம் கடும் வாக்குவாதம் உண்டானது. மேலும் கூச்சல்-குழப்பமும் ஏற்பட்டது.

வெளிநடப்பு

அதைத்தொடர்ந்து முதல்-மந்திரியின் பதிலில் திருப்தி இல்லை என்று கூறி முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உள்ளிட்ட பா.ஜனதா உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதன் பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேறியது.


Next Story