இயற்கை பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளில் மாற்றம்; சித்தராமையா வலியுறுத்தல்


இயற்கை பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளில் மாற்றம்; சித்தராமையா வலியுறுத்தல்
x

சித்தராமையா

இயற்கை பேரிடர் நிவாரண நிதி விதிமுறைகளில் மாற்றம் செய்ய வேண்டும் சித்தராமையா வலியுறுத்தி உள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேசிய இயற்கை பேரிடர் நிவாரண நிதியை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு ஒதுக்கீடு செய்கிறது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறையில் இந்த நிவாரண நிதி வழங்கும் விதிமுறைகளை மாற்றி அமைக்கிறது. கடைசியாக கடந்த 2015-ம் ஆண்டு இந்த விதிமுறைகள் மாற்றப்பட்டன. அந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வந்து 5 ஆண்டுகள் ஆகிவிட்டன. இன்னும் அந்த விதிமுறைகளை மாற்றி அமைக்கப்படவில்லை. தற்போது பணவீக்கம் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஆனால் நிவாரண நிதியை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு முடிவு எடுக்காமல் காலதாமதம் செய்து வருகிறது. கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் ரூ.2 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசு வெறும் ரூ.3,965 கோடி மட்டுமே வழங்கியுள்ளது.

விவசாயிகளுக்கு கூடுதல் நிவாரணம் வழங்க வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தினோம். அதனால் மாநில அரசு ரூ.2,391 கோடி நிவாரணம் வழங்கியது. அதனால் மத்திய அரசு உடனடியாக இயற்கை பேரிடர் நிவாரண நிதி குறித்த விதிமுறைகளில் திருத்தம் செய்ய வேண்டும். கடந்த 3 ஆண்டுகளில் சேதம் அடைந்த வீடுகளுக்கு இன்னும் நிவாரணம் வழங்கவில்லை.

இவ்வாறு சித்தராமையா தெரிவித்துள்ளார்.


Next Story