அரிக்கன்மேடு பகுதியில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்படும்- மத்திய மந்திரி மீனாட்சி லேகி


அரிக்கன்மேடு பகுதியில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்படும்- மத்திய மந்திரி மீனாட்சி லேகி
x

நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்ட அரிக்கன்மேடு பகுதியில் அகழாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று மத்திய இணை மந்திரி மீனாட்சி லேகி கூறினார்.

மத்திய மந்திரி

மத்திய வெளியுறவு மற்றும் கலாசாரத்துறை இணை மந்திரி மீனாட்சி லேகி புதுச் சேரியில் முகாமிட்டுள்ளார். அவர் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருடன் கலந் துரையாடல் நிகழ்த்தினர். அப்போது மத்திய அரசு பொதுமக்களுக்காக செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து விளக்கி கூறினார்.

நேற்று அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

டிஜிட்டல் மயம்

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால், ஏராளமான வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கும் நிதி உதவி, மானியம் பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக சென்று சேர்கிறது. இதனால் முறைகேடுகள் தடுக்கப்படுகிறது. கொரோனா நோய் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக உள்நாட்டிலேயே தரமான தடுப்பூசி தயாரிக்கப்பட்டு அனைத்து மக்களுக்கும் இலவசமாக வழங்கப்பட்டது.

தற்போது நாட்டிலுள்ள பெரும்பாலான கிராம பஞ்சாயத்துக்கள் டிஜிட்டல் மயமாகி உள்ளன. இதன் மூலம் கல்வி, சுகாதாரத் திட்டங்கள் பொதுமக்களுக்கு கிடைக்கிறது. நாட்டின் 75-வது ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் நாட்டின் வளர்ச்சியை கண்டு ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டும்.

அகழாய்வு பணிகள்

கொரோனாவுக்கு பிறகு நாடு வளர்ச்சியடைந்து வருகிறது. நாட்டில் சேவையாற்றி வரும் தொண்டு நிறுவனங்களின் பணியை நாம் போற்றுகிறோம். வெளிப்படைத்தன்மையற்ற, சட்டவிதிகளை மீறி செயல்படும் சில தொண்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

புதுச்சேரி அரிக்கன்மேடு தொல்லியல் தளங்களை மீண்டும் அகழாய்வு செய்து மேம் படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். அரிக்கன்மேடு நாட்டின் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். புராதன தளமான இந்த பகுதி நீண்டகாலமாக புறக்கணிக்கப்பட்டது வேதனை அளிக்கிறது.

மீண்டும் தொடங்கப்படும்

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் காலத்தில் இங்கு தொடங்கிய அகழ்வாராய்ச்சி பணியானது அதற்கு பிறகு வந்த அரசால் தொடரப்படாமல், பராமரிப்பின்றி கிடக்கிறது. இந்திய தொல்லியல் துறை சார்பில் அரிக்கன்மேடு பகுதியில் அகழ்வாய்வு பணிகள் மீண்டும் தொடங்கப்படும்.

புதுச்சேரி சிறந்த சுற்றுலா தலமாக உள்ளது. அதனை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். அதற்கு பிளாஸ்டிக் பொருள்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அனைவருமே தூய்மை பணியை கடைபிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அமைச்சர் சாய் சரவணன்குமார், செல்வகணபதி எம்.பி., சிவசங்கர் எம்.எல்.ஏ., பா.ஜ.க. மாநில தலைவர் சாமிநாதன் ஆகியோர் உடனிருந்தனர்.


Next Story