டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு மத்திய அரசு நடவடிக்கை
டெல்லி உள்ளிட்ட நகரங்களில் குறைந்த விலையில் தக்காளி விற்பனைக்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
புதுடெல்லி,
இந்திய சமையலறைகளில் முக்கிய இடம் பிடித்து வரும் காய்கறிகளில் ஒன்றான தக்காளியின் விலை கடந்த சில நாட்களாக மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் ஒரு கிலோ ரூ.200-க்கு மேல் விற்பதால் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதற்கிடையே தலைநகர் டெல்லி உள்ளிட்ட சில நகரங்களில் சில்லறை விலை சந்தையில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுத்து உள்ளதாக மத்திய நுகர்வோர் நலத்துறை செயலாளர் ரோகித் குமார் சிங் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
டெல்லி, உத்தரபிரதேசம், பீகார் மற்றும் மேற்கு வங்காளத்தில் குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. டெல்லி மட்டுமின்றி பாட்னா, வாரணாசி, கான்பூர் மற்றும் கொல்கத்தாவில் குறைந்த விலையில் தக்காளி கிடைக்கும்.
அந்த பகுதியில் தற்போதுள்ள விலையை விட கணிசமாக குறைந்த விலையில் தக்காளி விற்பனை செய்யப்படும். அந்த நாளில் நடைமுறையில் உள்ள சந்தை விகிதத்தை விட இது குறைந்தபட்சம் 30 சதவீதம் குறைவாக இருக்கும். நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
முதல் முறையாக சில்லறை சந்தைகளில் தக்காளியை கொள்முதல் செய்து விற்பனை செய்ய உள்ளோம். ஏற்கனவே வெங்காயத்துக்கு இதைச் செய்திருக்கிறோம்.
தேசிய வேளாண் கூட்டுறவுச்சந்தை கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் மேற்கொள்ளப்படும் இந்த விற்பனை, தக்காளி விலை குறையும் வரை நடைபெறும்.
இவ்வாறு ரோகித் குமார் சிங் தெரிவித்தார்.