'கோர்ட்டுகளின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட முயற்சி' - மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
‘கோர்ட்டுகளின் செயல்பாட்டில் மத்திய அரசு தலையிட முயற்சி செய்வதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.
கொல்கத்தா,
உயர்மட்ட நீதித்துறையில் நீதிபதிகளை நியமிக்கும் நடவடிக்கையை கொலீஜியம் அமைப்பு மேற்கொள்கிறது. இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டுக்கு மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜு எழுதியுள்ள கடிதத்தில், கொலீஜியம் அமைப்பில் அரசு நியமன உறுப்பினர்களை நியமிப்பதற்கான முன்மொழிவை தெரிவித்துள்ளார்.
அதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி நேற்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'இது ஒரு புதிய வகையான திட்டமிடலாகும். சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தில் மத்திய அரசின் பிரதிநிதித்துவம் இருந்தால், இயல்பாகவே மாநில அரசுகளும் தங்கள் பிரதிநிதிகளை கொலீஜியத்தில் சேர்க்கும். ஆனால் மாநில அரசுகளின் பரிந்துரைக்கு எந்த மதிப்பும் இருக்காது. கடைசியில், நீதித்துறை செயல்பாட்டில் மத்திய அரசுதான் நேரடியாக தலையிடுவதாக இருக்கும். அதை நாங்கள் விரும்பவில்லை. நீதித்துறை சுதந்திரமாகவே செயல்படுவதையே நாங்கள் விரும்புகிறோம்.' என்று அவர் கூறினார்.