இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவில் வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்து ₹80.44 ஆக உள்ளது.
மும்பை,
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த சூழலால் உலகம் முழுவதுமே பொருளாதார அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் தங்கம், கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
அதிகமான விலை ஏற்றம் பணவீக்கத்தை அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக உலகம் முழுவதுமே பங்குச்சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்து வருகின்றன. இதுமட்டுமின்றி முதலீடுகளைப் பல நாடுகளும் டாலர்களில் மாற்றி வருவதால் அதன் மதிப்பு உயர்ந்து பல நாடுகளின் பண மதிப்பு சரிந்து வருகிறது.
இன்று காலையில் சென்செக்ஸ் குறியீட்டு எண் 270 புள்ளிகள் குறைந்து 59,186 ஆகவும், தேசிய பங்குச் சந்தையின் நிப்டி குறியீட்டு எண் 65 புள்ளிகள் குறைந்து 17,653 ஆகவும் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்தநிலையில், பெடரல் ரிசர்வ் அமைப்பு தனது வட்டி விகித உயர்வை அறிவித்த பிறகு, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை எட்டியுள்ளது.
பெடரல் ரிசர்வ் வங்கி 75 பிபிஎஸ் வட்டியை உயர்தியது. இதனால் வட்டி விகிதத்தை 3% இலிருந்து 3.25% க்கு உயர்த்தியுள்ளது. வட்டி விகித உயர்வுக்குப் பிறகு, இந்திய ரூபாய் சரிந்து இன்றைய ஆரம்ப வர்த்தகத்தில், ரூபாயின் மதிப்பு 80.46 ஆக குறைந்தது. இதனால் டாலரின் மதிப்பு வலுப்பெற்று இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது.
நாணயம் அதன் முந்தைய நாள் முடிவில் 80.28 ஆக இருந்ததை விட 0.4% குறைவாக திறக்கப்பட்டது. இதற்கு முன், ஆக., 29ல் 80.12 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் ஐந்தாவது முறையாக ரூபாய் மதிப்பு 80ஐ தாண்டி உள்ளது.