அக்னி வீரர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க வேண்டும் - மம்தா பானர்ஜி வலியுறுத்தல்
அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்படும் அக்னி வீரர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
பர்த்வான்,
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்தை மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடுமையாக குறை கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், 'பா.ஜனதாவை போல இல்லாமல், அதிகமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்பதே எனது குறிக்கோள். அக்னிபத் திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களுக்கு 4 ஆண்டுகள் பணி வழங்கப்படுகிறது. அதன்பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்? எனவே இந்த திட்டத்தில் சேர்க்கப்படும் வீரர்களின் ஓய்வுபெறும் வயதை 65 ஆக நீட்டிக்க வேண்டும்' என்று மத்திய அரசை வலியுறுத்தினார்.
2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்தே, பாதுகாப்பு படையில் ஆட்களை சேர்க்கும் இந்த புதிய திட்டத்தை பா.ஜனதா தலைமையிலான மத்திய அரசு கொண்டு வந்திருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
பா.ஜனதா தனது சொந்த ஆயுதப்படைகளை உருவாக்கவே இந்த திட்டத்தை பயன்படுத்துவதாக ஏற்கனவே மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.