உள்நாட்டில் தட்டுப்பாட்டை போக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரிவிதிப்பு
உள்நாட்டில் தட்டுப்பாட்டை போக்க பெட்ரோல், டீசல் ஏற்றுமதிக்கு வரிவிதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ரிலையன்ஸ், ரோஸ்நெப்ட் போன்ற தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள், ஐரோப்பிய நாடுகளுக்கும், அமெரிக்காவுக்கும் பெட்ரோல், டீசலை ஏற்றுமதி செய்து வருகின்றன.
அந்த நிறுவனங்கள், ரஷியாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கிடைத்த கச்சா எண்ணெயை சுத்திகரித்து, சர்வதேச விலைக்கு ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன.
உக்ரைன்-ரஷிய போரால், மேற்கண்ட நாடுகளில் பெட்ரோல், டீசல் தேவை அதிகரித்துள்ளது. அதை பயன்படுத்தி, அந்நிறுவனங்கள், உள்நாட்டில் வினியோகம் செய்வதை விட்டுவிட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றன.
இதனால், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் போன்ற மாநிலங்களில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
இதை கருத்தில்கொண்டு, பெட்ரோல், டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றுக்கான ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரியை அறிமுகப்படுத்தி உள்ளது.
பெட்ரோல், விமான எரிபொருள் ஆகியவற்றின் ஏற்றுமதி மீதான வரி, லிட்டருக்கு ரூ.6 ஆகும். டீசல் ஏற்றுமதிக்கான வரி லிட்டருக்கு ரூ.13 ஆகும்.
இருப்பினும், இந்த வரிவிதிப்பால், உள்நாட்டில் பெட்ரோல், டீசல் சில்லரை விலை உயராது என்று மத்திய அரசு கூறியுள்ளது.