டெல்லியில் 19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டம்; மத்திய அரசு அழைப்பு
நாடாளுமன்ற கூட்டத்தொடரை முன்னிட்டு டெல்லியில் 19-ந்தேதி அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு மத்திய அரசு அழைப்பு விடுத்து உள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர்
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் 20-ந்தேதி தொடங்குகிறது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 11-ந்தேதி நடைபெறும் இந்த தொடரில் பல்வேறு புதிய மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. மேலும் மணிப்பூர் கலவரம், டெல்லி அரசின் அதிகாரத்தை குறைக்கும் அவசர சட்டம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் குறித்தும் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என தெரிகிறது. எனவே இந்த தொடரை சுமுகமாக நடத்துவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக அனைத்துக்கட்சிகளுடன் ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுத்து உள்ளது.
பொது சிவில் சட்டம்
அதன்படி டெல்லியில் வருகிற 19-ந்தேதி இந்த கூட்டம் நடைபெறுகிறது. இதற்காக அனைத்துக்கட்சிகளுக்கும் மத்திய அரசு அழைப்பு கடிதம் அனுப்பி உள்ளது. முன்னதாக, இந்த கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாக நடத்துவதற்கு ஒத்துழைக்குமாறு நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷியும் அனைத்துக்கட்சிகளையும் கேட்டுக்கொண்டிருந்தார்.
மழைக்கால கூட்டத்தொடரை ஆக்கபூர்வமாகவும், சுமுகமாகவும் நடத்தி முடிக்க மத்திய அரசு திட்டமிட்டு இருந்தாலும், இந்த தொடரில் பெரும் அரசியல் புயல் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, மணிப்பூர் கலவரம், பொது சிவில் சட்டம் உள்ளிட்ட பிரச்சினைகளில் மத்திய அரசை பல்வேறு எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டி வரும் நிலையில், இந்த பிரச்சினைகளால் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் சுமுக நிகழ்வுகளுக்கு பெரும் இடையூறு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.