ஆக்சிஜன், உயிர்காப்பு சாதனங்களை தயாராக வைத்திருங்கள்; மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்


ஆக்சிஜன், உயிர்காப்பு சாதனங்களை தயாராக வைத்திருங்கள்; மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம்
x

ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர்காப்பு சாதனங்கள் இருப்பை உறுதி செய்யுமாறு மாநிலங்களுக்கு மத்திய அரசு கடிதம் எழுதி உள்ளது.

ஆக்சிஜன், உயிர்காப்பு சாதனங்கள்

சீனா உள்ளிட்ட சில வெளிநாடுகளில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து இருக்கிற நிலையில், இதையொட்டி நமது நாட்டில் விழிப்புணர்வு, உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் மத்திய அரசின் சார்பில் சுகாதார அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் மனோகர் அக்னானி, மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கும் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்தக் கடிதத்தில் அவர் கூறியுள்ள முக்கிய அம்சங்கள்:-

* பெருந்தொற்றின்போது, எல்லா ஆஸ்பத்திரிகளிலும் திரவ மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பையும், வெண்டிலேட்டர் உள்ளிட்ட அனைத்து உயிர் காக்கும் சாதனங்கள் இருப்பையும் உறுதி செய்ய வேண்டும். நெருக்கடியான தருணங்களில் உயிர்களைக் காப்பதில் நம்பகமான ஆக்சிஜன் வினியோகம் முக்கியமானது.

* ஆக்சிஜன் ஆலைகள் (பிஎஸ்ஏ) அனைத்தும் செயல்பட வேண்டும். அவற்றை மீண்டும் நிரப்புவதில் தங்கு தடையற்ற வினியோக சங்கிலி உறுதி செய்யப்பட வேண்டும்.

* ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தேவை, பயன்பாடு தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஆதரவு

ஏற்கனவே கொரோனா பெருந்தொற்று காலத்தில் பி.எஸ்.ஏ. என்னும் ஆக்சிஜன் ஆலைகளை அமைப்பதற்கும், ஆக்சிஜன் செறிவூட்டிகள் அமைப்பதற்கும் இன்னும் இது போன்ற அடிப்படை கட்டமைப்புகளை ஏற்படுத்துவதற்கும் மத்திய அரசு ஆதரவு அளித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story