பல வழக்குகளை கடந்து வந்த புதிய நாடாளுமன்றம்
புதிய நாடாளுமன்ற கட்டிடம் பல கோர்ட்டு வழக்குகளை கடந்து வந்திருக்கிறது.
புதுடெல்லி,
பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்துவைத்த புதிய நாடாளுமன்ற கட்டிடம் பல கோர்ட்டு வழக்குகளை கடந்து வந்திருக்கிறது.
முதலாவது வழக்கு, 2020-ம் ஆண்டு ராஜீவ் சூரி, அனுஜ் ஸ்ரீவஸ்தவா உள்ளிட்டோரால், இந்த திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் தொடரப்பட்டது.
பின்னர் சுப்ரீம் கோர்ட்டுக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கில் கடந்த 2021-ம் ஆண்டு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில் 2-1 பெரும்பான்மையில், நாடாளுமன்ற கட்டிடம் உள்ளடங்கிய சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டது. பின்னர், கொரோனா காலத்தில் பாதுகாப்பு, சுகாதார பிரச்சினைகளை கருத்தில்கொண்டு கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, டெல்லி ஐகோர்ட்டிலும், பின்னர் சுப்ரீம் கோர்ட்டிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல்பகுதியில் அமைந்த சிங்க சிற்பத்தை எதிர்த்தும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தொடரப்பட்டன. ஆனால் அந்த சிற்பம், இந்திய அரசு இலச்சினை சட்டத்தை மீறவில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துவிட்டது.
இந்த வழக்குகளின் வரிசையில், புதிய நாடாளுமன்ற திறப்புவிழாவுக்கு 2 நாட்களுக்கு முன்னதாக புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு திறந்துவைக்க வேண்டும் என்று வழக்கு தொடுக்கப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.