கர்நாடகத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வருகை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்


கர்நாடகத்தில் மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வருகை; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தகவல்
x

கர்நாடகத்தில் வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள ரூ.600 கோடி நிதி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், மழை பாதிப்புகளை பார்வையிட மத்திய குழு வர இருப்பதாகவும் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தெரிவித்தார்.

பெங்களூரு:

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ரூ.600 கோடி

கர்நாடகத்தில் மழை காரணமாக சாலை, பாலங்கள், மின் கம்பங்கள் சேதம் அடைந்துள்ளன. அவற்றை சீரமைக்க ரூ.600 கோடி ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவுக்கு ரூ.300 கோடி ஒதுக்கப்படும். மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் ரூ.664 கோடி கையிருப்பு உள்ளது. பெங்களூருவில் வெள்ளம் ஏற்படும்போது மீட்பு பணிகளில் ஈடுபட தனியாக ஒரு மாநில பேரிடர் மீட்பு குழு உருவாக்கப்படும். அந்த குழுவுக்கு தேவையான மீட்பு உபகரணங்கள் வழங்கப்படும்.

பெங்களூரு தவிர மாநிலத்தின் பிற மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்ள மேலும் 2 மீட்பு குழுக்கள் உருவாக்கப்படும். இதில் ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் நியமிக்கப்படுவார்கள். வெள்ள சேதங்களை பார்வையிட மத்திய குழு வருகிறது. வெள்ள சேதங்கள் குறித்து அந்த குழுவிடம் கடிதம் வழங்கப்படும். பீமேஸ்வரா ஆறு மற்றும் அதை சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பியதால் மண்டியாவில் உள்ள நீரேற்று நிலையத்திற்குள் வெள்ளம் புகுந்து சேதம் ஏற்பட்டுள்ளது. அதை சரிசெய்யும் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

ஆழ்குழாய் கிணறுகள்

அந்த பணிகள் முடிவடையும் வரையில் பெங்களூரு நகர மக்களுக்கு குடிநீர் வழங்க மாற்று திட்டத்தை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம். பெங்களூரு குடிநீர் வடிகால் வாரியத்தின் கட்டுப்பாட்டில் 8 ஆயிரம் ஆழ்குழாய் கிணறுகள் உள்ளன. அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படும். பெங்களூருவில் 110 கிராமங்கள் மற்றும் நகரசபைகள் சேர்க்கப்பட்டதால் நகரம் விரிவடைந்துள்ளது. அந்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் பொறுப்பு மாநகராட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

அதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. பெங்களூருவில் பெரிய ஏரிகளில் நீர் திறக்கப்படும் கதவுகள் அமைக்கப்படும். ஏரிகளில் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும். நீர் நிலைகள் மற்றும் கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். வறட்சி மாவட்டங்களில் அதாவது கோலார், சிக்பள்ளாப்பூர், சித்ரதுர்கா, சாம்ராஜ்நகர், கலபுரகி, பீதர், கொப்பல் மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளதால் அங்குள்ள ஏரி, குளங்கள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதனால் நிலத்தடி நீர்மட்டமும் உயர்ந்துள்ளது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story