தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் உண்மையான தகவல்களை பகிர மறுப்பதாக டெல்லி அரசு மீது மத்திய தகவல் ஆணையம் புகார்
பொதுநலன் சார்ந்த பிரச்சனைகளில் டெல்லி அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கையை காட்டுகிறது.
புதுடெல்லி,
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்துவதில் டெல்லி அரசின் தோல்வி குறித்து டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவுக்கு மத்திய தகவல் ஆணையத்தின்(சிஐசி) ஆணையர் உதய் மஹூர்கர் புகார் கடிதம் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நில விவகாரங்களைக் கையாளும் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, கூட்டுறவு, சுகாதாரம் மற்றும் அதிகாரம் போன்ற பல அரசுத்துறைகள், தவறான நோக்கத்துடன் உண்மையான தகவல்களை அளிக்காமல், முறையான தகவல்களைப் பகிர மறுக்கின்றன, அல்லது தவறான தகவல்களைத் தவறாக வழிநடத்தும் நோக்கத்துடன் வழங்குகின்றன.
இத்தகைய நடவடிக்கை, பொதுநலன் சார்ந்த பிரச்சனைகளில் டெல்லி அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையற்ற நடவடிக்கையையும் மற்றும் பொறுப்பில்லாமையையும் காட்டுகிறது.
பொதுத் தகவல் அதிகாரிகள் தங்கள் எழுத்தர்களையும் கீழ்மட்டப் பணியாளர்களையும் ஆணையத்தின் முன் ஆஜராக அனுப்புகிறார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆவணங்களுடன் புகாரளித்துள்ளது.
இந்த புகாரை தொடர்ந்து, டெல்லி துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனா, இந்த விஷயத்தை உடனடியாக விசாரித்து கவனிக்கும்படி உத்தரவிட்டார். மேலும், சட்ட விதிகளின்படி தேவையான நடவடிக்கை எடுக்குமாறு தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டார்.