சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி
சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
உலகில் அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் உள்ளது. உள்நாட்டில் போதிய அளவில் சர்க்கரை கையிருப்பை உறுதி செய்யவும், சர்க்கரை விலையை கட்டுக்குள் வைக்கவும், அதன் ஏற்றுமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது. அதன்பின், சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்தது.
இந்த நிலையில், சர்க்கரை ஏற்றுமதிக்கு ஒதுக்கீடு அடிப்படையில் அனுமதி அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, வருகிற 2023-ம் ஆண்டு மே மாதம் வரை 60 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மேலும், 3 ஆண்டு சராசரி சர்க்கரை உற்பத்தியில் 18.23% சர்க்கரையை ஒதுக்கீடு அடிப்படையில் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மத்திய உணவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.