சிபிஎஸ்இ பிளஸ் 2, 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின் கீழ் பயின்ற பிளஸ் 2 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட்ட பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது.
டெல்லி,
நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் சிபிஎஸ்இ பள்ளிகளில் கடந்த பிப்ரவரி 15 முதல் மார்ச் 21 வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, பிப்ரவரி 15 முதல் ஏப்ரல் 5 வரை பிளஸ் 2 பொதுத்தேர்வும் நடைபெற்றது. நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதினர்.இதனிடையே, சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் வெளியீட்டு தேதி தொடர்பாக குழப்பமான சூழ்நிலை நிலவி வந்தது.
இந்நிலையில், சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில், ஒட்டுமொத்தமாக 87.33 சதவிகிதமான பேர் தேர்ச்சிபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு தேர்ச்சி விகிதமான 83.40ஐ விட அதிகம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வை 16 லட்சத்து 60 ஆயிரத்து 511 மாணவ, மாணவிகள் எழுதியுள்ளனர். இதில், 14 லட்சத்து 50 ஆயிரத்து 174 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.
சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவுகளை மாணவர்கள் cbse.nic.in மற்றும் cbse.gov.in ஆகிய இணையதளங்களில் சென்று அறிந்துகொள்ளலாம் என சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் சென்னை மண்டலத்தில் 97.40 சதவிகித மாணவ, மாணவிகள் தேர்ச்சிபெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளை cbse.gov.in, cbseresults.nic.in ஆகிய இணையதளங்கள் வாயிலாக மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.12 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 99.91 சதவீத தேர்ச்சியுடன் திருவனந்தபுரம் முதலிடத்திலும், 99.14 சதவீத தேர்ச்சியுடன் சென்னை மண்டலம் 3-வது இடத்திலும் உள்ளது.