கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு


கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமாரிடம் சி.பி.ஐ. விசாரிக்க அனுமதி; ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 20 Oct 2023 12:15 AM IST (Updated: 20 Oct 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

டி.கே.சிவக்குமார் மீதான ெசாத்து குவிப்பு வழக்கில் இடைக்கால தடையை நீக்கிய கர்நாடக ஐகோர்ட்டு, சி.பி.ஐ. விசாரணைக்கு அனுமதி அளித்ததுடன் 3 மாதங்களில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராகவும், துணை முதல்-மந்திரியாகவும் இருப்பவர் டி.கே.சிவக்குமார். அவரது வீடுகளில் கடந்த 2017-ம் ஆண்டு வருமான வரி சோதனை நடைபெற்றது. அதில் டெல்லி வீட்டில் சுமார் ரூ.8½ கோடி ரொக்கம் சிக்கியது. இந்த விஷயத்தில் சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பான வழக்கை அமலாக்கத்துறை பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் டி.கே.சிவக்குமார் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். அவர் 6 மாதங்கள் சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே இருக்கிறார்.

இதற்கிடையே சி.பி.ஐ., டி.கே.சிவக்குமார் சட்டவிரோதமாக வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்களை குவித்துள்ளதாக கூறி அவர் மீது கடந்த 2020-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வழக்கு பதிவு செய்தது. அதாவது கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை அவரது சொத்துக்கள் ரூ.34 கோடியில் இருந்து ரூ.163 கோடியாக அதிகரித்து உள்ளதாக சி.பி.ஐ. கூறியுள்ளது.

தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள சி.பி.ஐ.யின் சொத்து குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரி கர்நாடக ஐகோர்ட்டில் டி.கே.சிவக்குமார் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி, அந்த வழக்கிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. கர்நாடக ஐகோர்ட்டு விதித்துள்ள இடைக்கால தடையை நீக்குமாறு அந்த அமைப்பு கோரியது. இதை சுப்ரீம் கோர்ட்டு நிராகரித்துவிட்டது.

இந்த நிலையில் டி.கே.சிவக்குமாரின் மனு கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதி நடராஜன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கில் நீதிபதி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கிற்கு விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீக்குவதாக நீதிபதி அறிவித்தார்.

மேலும், இந்த வழக்கு விசாரணையை 3 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி சி.பி.ஐ.க்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் மனு மிகவும் தாமதமாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளதாகவும், விசாரணை இறுதிக்கட்டத்தில் இருப்பதால், அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

கர்நாடக ஐகோர்ட்டின் இந்த உத்தரவால் டி.கே.சிவக்குமாருக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவர் கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அவர் கைது செய்யப்பட்டால் அது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். ஏனெனில் அவர் கட்சியை வலுப்படுத்துவதில் பம்பரமாக சுழன்று செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக ஐகோர்ட்டின் இந்த உத்தரவை எதிர்த்து டி.கே.சிவக்குமார் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சொத்து குவிப்பு வழக்கில் டி.கே.சிவக்குமார் மீதான புகார் நிரூபிக்கப்பட்டு அவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும்பட்சத்தில் அவர் தண்டனை காலம் முடிந்து 6 ஆண்டுகளுக்கு எந்த தேர்தலிலும் போட்டியிட முடியாது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.


Next Story