டெல்லி அரசு தலைமைச்செயலகத்தில் துணை முதல்-மந்திரி அலுவலகத்தில் சி.பி.ஐ. அதிரடி சோதனை
மதுபான ஊழல் வழக்கில், டெல்லி அரசு தலைமைச்செயலகத்தில் துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அலுவலகத்தில், சி.பி.ஐ. அதிரடி சோதனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மதுபான கொள்கை ஊழல்
டெல்லியில் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடக்கிறது. அங்கு, மதுபான கொள்கையில் பெருமளவு ஊழல் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக தனியாருக்கு மதுக்கடை உரிமங்கள் வழங்கி சலுகைகளை தாராளமாக தந்து கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதில் துணை நிலை கவர்னர் வி.கே.சக்சேனா பரிந்துரையின் பேரில் சி.பி.ஐ. விசாரணை நடந்து வருகிறது.
இதில் கலால் துறையை கவனிக்கிற துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா மீது சி.பி.ஐ.யின் கழுகுப்பார்வை விழுந்துள்ளது. அவர் உள்ளிட்டவர்கள் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது.
மேலும் மணிஷ் சிசோடியாவுக்கு சொந்தமான இடங்களில் சி.பி.ஐ. கடந்த ஆகஸ்டு மாதம் அதிரடி சோதனைகளை நடத்தியது. ஆனால் இது மத்திய பா.ஜ.க. அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று ஆம் ஆத்மி கட்சி சாடியது.
அலுவலகத்தில் சோதனை
இந்த நிலையில், டெல்லி யூனியன் பிரதேச அரசின் தலைமைச்செயலகத்தில் உள்ள துணை முதல்-மந்திரி மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடியாக நுழைந்து சோதனைகளை நடத்தினர்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து மணிஷ் சிசோடியா டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-
இன்று எனது அலுவலகத்துக்கு சி.பி.ஐ.யினர் மீண்டும் வந்துள்ளனர். அவர்களை வரவேற்கிறேன். அவர்கள் எனது வீட்டினையும், லாக்கரையும் சோதனை போட்டனர். எனக்கு எதிராக எனது கிராமத்தில் விசாரணையும் நடத்தினர். எதுவும் கிடைக்கவில்லை. இப்போதும் எதுவும் கிடைக்காது. ஏனென்றால் நான் எந்த தவறும் செய்யவில்லை. நான் டெல்லி குழந்தைகளின் கல்விக்காக நேர்மையுடன் உழைத்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். மணிஷ் சிசோடியா அலுவலகத்தில் சி.பி.ஐ. நேற்று சோதனை நடத்தியதாக டெல்லி அரசு வட்டாரங்களும் தெரிவித்தன.