ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரியிடம் கூடுதலாக ரூ.36 லட்சம், ½ கிலோ தங்கம் பறிமுதல்: சி.பி.ஐ. நடவடிக்கை


ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரியிடம் கூடுதலாக ரூ.36 லட்சம், ½ கிலோ தங்கம் பறிமுதல்: சி.பி.ஐ. நடவடிக்கை
x

ஓய்வு பெற்ற ரெயில்வே அதிகாரியிடம் கூடுதலாக ரூ.36 லட்சம், ½ கிலோ தங்கம் பறிமுதல் செய்து சி.பி.ஐ. நடவடிக்கை எடுத்துள்ளது.

புதுடெல்லி,

ஒடிசாவை சேர்ந்த பிரமோத் குமார் ஜெனா, இந்திய ரெயில்வேயில் 1987-ல் பணிக்கு சேர்ந்தார். டிராபிக் சேவை அதிகாரி பிரிவில் பணியில் சேர்ந்த அவர், முதுநிலை வணிக மேலாளராக உயர் பதவி வகித்து கடந்த ஆண்டு நவம்பரில் ஓய்வு பெற்றார். அவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகளை குவித்ததாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தினார்கள். அவர் பணிபுரிந்த காலத்தில் நடந்த ஒப்பந்தங்கள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தபோது ஏராளமான முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

அதையடுத்து அவரது பெயரிலும், குடும்ப உறவினர்கள் பெயரிலும் இருந்த பணம் மற்றும் சொத்துகள் ஆய்வு செய்யப்பட்டு முறைகேடுகள் மதிப்பிடப்பட்டு வருகின்றன. ஏற்கனவே ரூ.1.57 கோடி ரொக்கப்பணம், வங்கி கணக்கில் ரூ.1.51 கோடி, இதர வகையில் தபால் மற்றும் வங்கி சேமிப்பில் ரூ.3.33 கோடி, மியூச்சுவல் பண்ட் முதலீட்டில் 47.75 லட்சம், நாணயங்கள் மற்றும் தங்க கட்டிகள், நகைகளாக 17 கிலோ தங்கம் (இதன் மதிப்பு ரூ.9.5 கோடி) மற்றும் அசையா சொத்துகளின் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இந்தநிலையில் ஒரு ஏஜென்சியின் லாக்கரில் ஜெனா கணக்கில் இருந்த பெட்டியை திறந்தபோது அதில் மேலும் ரூ.36 லட்சம் பணம் மற்றும் 457 கிராம் தங்க நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர்.


Next Story