எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்


எங்கள் கட்டுப்பாட்டில் சி.பி.ஐ. இல்லை - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு வாதம்
x

கோப்புப்படம் 

மாநில அரசிடம் முன்அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருவதாக சுப்ரீம் கோர்ட்டில் மேற்கு வங்காள அரசு வழக்கு தொடர்ந்தது.

புதுடெல்லி,

மேற்கு வங்காளத்தில் விசாரணை நடத்தவும், சோதனை நடத்தவும் சி.பி.ஐ.க்கு அளிக்கப்பட்டிருந்த பொது அனுமதியை கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் 16-ந்தேதி மேற்கு வங்காள மாநில அரசு வாபஸ் பெற்றது.

எனவே, அங்கு விசாரணை நடத்த மாநில அரசிடம் சி.பி.ஐ. முன்அனுமதி பெறுவது அவசியம் என்று கருதப்பட்டது. ஆனால், அதன்பிறகும் மாநில அரசிடம் முன்அனுமதி பெறாமல் சி.பி.ஐ. விசாரணை மற்றும் சோதனை நடத்தி வருவதாக குற்றம்சாட்டி, மத்திய அரசுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேற்கு வங்காள மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.

மத்திய-மாநில அரசுகளுக்கு இடையிலான மோதலில் தலையிட்டு தீர்வு காண அரசியல் சட்டத்தின் 131-வது பிரிவின்கீழ் சுப்ரீம் கோர்ட்டுக்கு அதிகாரம் இருப்பதால், அப்பிரிவின்கீழ், மேற்கு வங்காள மாநில அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா கூறியதாவது:-

அரசியல் சட்டத்தின் 131-வது பிரிவு, சுப்ரீம் கோர்ட்டுக்கு அளிக்கப்பட்ட மிகவும் புனிதமான அதிகாரங்களில் ஒன்று. அதை தவறாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது. மேற்கு வங்காளம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ள வழக்குகளை இந்திய அரசு பதிவு செய்யவில்லை. இந்திய அரசு எந்த வழக்கையும் பதிவு செய்யவில்லை. அவ்வழக்குகளை சி.பி.ஐ. தான் பதிவு செய்தது. சி.பி.ஐ., இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story