கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிரடியாக குறைப்பு


கர்நாடக அணைகளில் இருந்து  தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிரடியாக குறைப்பு
x
தினத்தந்தி 29 Sept 2023 12:15 AM IST (Updated: 29 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. வினாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் செல்கிறது.

மண்டியா-

கர்நாடகத்திற்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே காவிரி நீர் பங்கிடுவது தொடர்பாக தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. குறிப்பாக மழை பொய்த்து போகும்போது இடர்பாடு ஏற்படும் நேரத்தில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை இருந்து வருகிறது.

காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 முறை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

இந்தநிைலயில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின் பேரில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடியில் காவிரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ் (கிருஷ்ணராஜசாகர்) அணையில் இருந்து வினாடிக்கு 2,646 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதேபோல மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த 2 அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 4,646 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி கே.ஆர்.எஸ் அணைக்கு வினாடிக்கு 5,183 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 97.28 அடியாக இருந்தது. இதேபோல கபினி அணைக்கு வினாடிக்கு 1,236 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 2,273.45 அடியாக இருந்தது.

நேற்று முன்தினம் இந்த 2 அணைகளில் இருந்து 6,076 கன அடி நீர் திறக்கப்பட்டிருந்த நிலையில், அது நேற்று வினாடிக்கு 4,646 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


Next Story