மண்டியாவில் தீவிரம் அடையும் விவசாயிகள் போராட்டம்
தமிழகத்துக்கு காவிரியில் 4-வது நாளாக கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே தண்ணீர் திறப்பை கண்டித்து நேற்று மண்டியாவில் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்துக்கு காவிரியில் நீர்...
கர்நாடகத்திற்கும், தமிழகத்திற்கும் இடையே காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் டெல்லியில் நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கூறி கர்நாடகத்துக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி கடந்த 2 நாட்களாக மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர்(கே.ஆர்.எஸ்.) அணையில் இருந்து வினாடிக்கு 7 ஆயிரம் கன அடி வீதத்துக்கு குறையாமலும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 2 ஆயிரம் கன அடி வீதமும் என மொத்தம் காவிரியில் தமிழகத்துக்கு வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது.
கோஷம்
நேற்று 4-வது நாளாகவும் கே.ஆர்.எஸ். மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியாவில் தினமும் விவசாயிகள், கன்னட அமைப்பினர் என பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முன்னதாக வாயில் அடித்துக் கொண்டும், தீப்பந்தம் ஏந்தியும், காவிரி ஆற்றில் இறங்கியும், அரை நிர்வாணத்துடனும் என பல்வேறு வகைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்கள் எதிர்ப்பையும், நிலைமையையும் வெளிப்படுத்தினர். இந்த நிலையில் நேற்று 4-வது நாளாக மண்டியா டவுனில் உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா சிலை முன்பு மண்டியா மாவட்ட விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களது போராட்டத்திற்கு பல்வேறு சங்கத்தினரும், கட்சியினரும் ஆதரவு தெரிவித்தனர். போராட்டத்தின் போது அவர்கள் விவசாயிகளுக்கு அநியாயம் இழைக்கப்பட்டு உள்ளதாகவும், காவிரிக்கு தண்ணீர் திறப்பை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் கோஷமிட்டனர். மேலும் அவர்கள் தங்கள் வாய்களில் அடித்துக் கொண்டு தங்களுக்கு அநியாயம் இழைக்கப்படுவதாக நூதன முறையில் கோஷமிட்டனர். மேலும் ஸ்ரீரங்கப்பட்டணாவில் நடந்த போராட்டத்தில் ஒருதரப்பு விவசாயிகள் தலையில் சிறிய அளவிலான பாறாங்கற்களை சுமந்து கொண்டு ஊர்வலமாக வந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலைமறியல்
இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த விவசாயிகள் சங்க தலைவர்கள் திடீரென மண்டியா டவுனில் ஜே.சி.சர்க்கிளில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களுக்கு ஆதரவாக விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே கே.ஆர்.எஸ். அணை அருகே ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.வும், அக்கட்சியின் மூத்த தலைவருமான சி.எஸ்.புட்டராஜு கலந்து கொண்டார். அப்போது நிருபர்களுக்கு பேட்டி அளித்த சி.எஸ்.புட்டராஜு, 'காவிரியில் வறட்சி ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது கண்டனத்திற்குரியது. காவிரி விவகாரத்தில் மாநில அரசும், மத்திய அரசும் கண் திறக்கும் வரை ஜனதா தளம்(எஸ்) கட்சியின் போராட்டம் ஓயாது' என்று கூறினார்.
இந்த போராட்டத்தில் ஜி.டி.தேவேகவுடா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் டி.சி.தம்மண்ணா, ரவீந்திரா ஸ்ரீகண்டய்யா, சுரேஷ்கவுடா, அன்னதாணி, எச்.டி.மஞ்சு எம்.எல்.ஏ. உள்பட ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பை நிறுத்தக்கோரி மாவட்ட கலெக்டர் குமாரிடம் மனு கொடுத்தனர்.
தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பினர் போராட்ட களத்தில் குதித்துள்ளதால் மண்டியாவில் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.