ரெயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்ய இருந்த நபரை உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய ரெயில்வே காவலர்..!
ஆந்திராவில் ரெயில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்ய இருந்த நபரை உயிரை பணயம் வைத்து ரெயில்வே பாதுகாப்புக் காவலர் காப்பாற்றினார்.
ஸ்ரீகாகுளம்,
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் சாலை ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தில் குதித்து தற்கொலை செய்து கொள்ள முயன்ற நபரை, உயிரை பணயம் வைத்து ரெயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) காவலர் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.
வெள்ளிக்கிழமை அதிகாலை 1.35 மணியளவில் ரெயில்வே பாதுகாப்புப் படை கான்ஸ்டபிள் கிரி என்பவர் பிளாட்பாரப் பணியில் இருந்தார். அப்போது வழித்தட எண் 03-ல் ஈஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரெயில் நெருங்கிக்கொண்டிருந்தபோது திடீரென ஒரு நபர் தண்டவாளத்தில் குதித்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக கான்ஸ்டபிள் கிரி, தன் உயிரை பணயம் வைத்து விரைந்து தண்டவாளத்தில் குதித்து, அந்த நபரை பாதுகாப்பாக இழுத்து காப்பாற்றினார்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு மற்றும் நிதி பிரச்சனை காரணமாக அந்த நபர் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது. பின்னர் பணியில் இருந்த ரெயில்வே பாதுகாப்புப் படை அதிகாரி, ஊழியர்களுடன் சேர்ந்து, அந்த நபருக்கு ஆலோசனை அளித்து, சம்பவம் குறித்து அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிவித்தார். பின்னர் அந்த நபர் பத்திரமாக அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.