கால்நடை கடத்தல் வழக்கு: அனுபிரதா மொண்டலின் சி.பி.ஐ. காவல் ஆகஸ்டு 24 வரை நீட்டிப்பு


கால்நடை கடத்தல் வழக்கு:  அனுபிரதா மொண்டலின் சி.பி.ஐ. காவல் ஆகஸ்டு 24 வரை நீட்டிப்பு
x

கால்நடை கடத்தல் வழக்கில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் அனுபிரதா மொண்டலின் சி.பி.ஐ. காவலை ஆகஸ்டு 24-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.



கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பீர்பும் மாவட்ட தலைவர் மற்றும் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளராகவும் இருந்து வந்தவர் அனுபிரதா மொண்டல்.

கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 21-ந்தேதி எல்லை பாதுகாப்பு படையின் முன்னாள் தளபதி ஒருவரை கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. கைது செய்து இருந்தது. அவரிடம் நடந்த விசாரணையில், இந்த விவகாரத்தில் அனுபிரதா மொண்டலின் தொடர்பு வெளிச்சத்திற்கு வந்தது.

இந்நிலையில், பீர்பும் நகரில் உள்ள போல்பூர் பகுதியில் அமைந்த மொண்டலின் இல்லத்திற்கு சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 11-ந்தேதி சென்று, கால்நடை கடத்தல் வழக்கில் அவரை கைது செய்தது. இதனையடுத்து, அவர் மருத்துவ பரிசோதனைக்காக அழைத்து செல்லப்பட்டார்.

கால்நடை கடத்தல் வழக்கில் கடந்த 5-ந்தேதி மொண்டலுக்கு, சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பியது. அதில், கொல்கத்தா நகரிலுள்ள நிஜாம் பேலஸ் பகுதியில் அமைந்த சி.பி.ஐ. அலுவலகத்தில் 8-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகும்படி தெரிவித்து இருந்தது. அவர் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவரை 20-ந்தேதி (இன்று) வரை விசாரிக்க சி.பி.ஐ.க்கு கோர்ட்டு அனுமதி அளித்து இருந்தது. இந்நிலையில், அனுபிரதா மொண்டலுக்கு இன்று மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் பின்னர் சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அவருக்கு சி.பி.ஐ. காவலை ஆகஸ்டு 24-ந்தேதி வரை நீட்டித்து கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மேற்கு வங்காளத்தில் ஆசிரியர்கள் நியமன ஊழலில் ரூ.20 கோடிக்கும் கூடுதலான பணபரிமாற்றங்கள் நடந்தது பற்றிய விசாரணையில், முன்னாள் கல்வி மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டார். அவரது உதவியாளர் மற்றும் நடிகையான ஆர்பிடா முகர்ஜியும் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், மேற்கு வங்காளத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் நெருங்கிய உதவியாளர் கால்நடை கடத்தல் வழக்கில் சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டது அடுத்தடுத்து திருப்பங்களை ஏற்படுத்தி உள்ளது.


Next Story