மத்திய பிரதேசத்தில் ரூ.340 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி


மத்திய பிரதேசத்தில் ரூ.340 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம் பறிமுதல் - தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி
x

Image Courtesy : ANI

கடந்த அக்டோபர் 9-ந்தேதி முதல் நவம்பர் 16-ந்தேதி வரை தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டனர்.

போபால்,

மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் உள்ள 230 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்றைய தினம் நடைபெற்றது. அங்கு மொத்தம் 71.16 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 3-ந்தேதி நடைபெற உள்ளது.

முன்னதாக தேர்தலை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் கடந்த அக்டோபர் 3-ந்தேதி முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. இதையடுத்து தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சோதனையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட பணம், நகை, மதுபானம் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

அந்த வகையில் கடந்த அக்டோபர் 9-ந்தேதி முதல் நவம்பர் 16-ந்தேதி வரை பறக்கும் படையினர் மற்றும் கண்காணிப்பு குழுவினர் இணைந்து நடத்திய சோதனைகளில், மொத்தம் ரூ.339.95 கோடி மதிப்பிலான ரொக்கம், மதுபானம், தங்கம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, ரூ.40.18 கோடி ரொக்கம், ரூ.65.56 கோடி மதிப்பிலான மதுபானம், ரூ.17.25 கோடி மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி, ரூ.92.76 கோடி மதிப்பிலான அரிய வகை உலோகங்கள் மற்றும் ரூ.124.18 கோடி மதிப்பிலான விலையுயர்ந்த பொருட்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story