கோர்ட்டு தீர்ப்புகளை பின்பற்றி அர்ச்சகர்களை நியமிக்க கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை
கோர்ட்டு தீர்ப்புகளை பின்பற்றி அர்ச்சகர்களை நியமிக்க கோரிய வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நாளை நடைபெறுகிறது.
புதுடெல்லி,
அகில இந்திய சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 'கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனத்தின்போது ஆகம விதிகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சேஷம்மாள், ஆதி சைவ சிவாச்சாரியார்கள் வழக்குகளில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து மீறி வருகிறது. இந்த தீர்ப்புகளை கட்டாயம் பின்பற்ற தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள ஆகம கோவில்களை கண்டறிய சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறியிருந்தார்.
இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வக்கீல் ஜி.பாலாஜி முறையிட்டார். இதனையடுத்து இந்த மனுவை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு நாளை (திங்கட்கிழமை) விசாரிக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.