14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு


14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை; தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு
x
தினத்தந்தி 10 Nov 2022 12:15 AM IST (Updated: 10 Nov 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில் 14-வது மாடியில் இருந்து குதித்து மாணவன் தற்கொலை செய்த சம்பவத்தில் தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்பு காவலாளியிடமும் போலீசார் விசாரணை நடத்தி தகவல்கள் பெற்றுள்ளனர்.

பெங்களூரு:

மாணவன் தற்கொலை

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட நாகவாரா அருகே நூர்நகர் லே-அவுட்டை சேர்ந்தவர் முகமது நூர். இவரது மனைவி நோகேரா. இந்த தம்பதியின் மகன் மோகின் (வயது 15). இந்த சிறுவன் தனியார் பள்ளியில் எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற அவன், அங்கு நடந்த தேர்வை எழுதினான். அப்போது சக மாணவனை காப்பி அடித்து மோகின் தேர்வு எழுதி உள்ளான்.

இதையடுத்து, மோகினை வகுப்பறையில் இருந்து ஆசிரியை வெளியே அனுப்பி வைத்திருந்தார். மற்ற மாணவர்கள் முன்பு தன்னை அவமானப்படுததி விட்டதாக நினைத்து, பள்ளியில் இருந்து மோகின் வீட்டுக்கு வந்திருந்தான். பின்னர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்ற மோகின், 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டான்.

பள்ளியில் போலீஸ் விசாரணை

மாணவன் தற்கொலை செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தங்களது மகனின் உடலை பார்த்து முகமது நூர், அவரது மனைவி கதறி அழுத காட்சி கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது. இந்த தம்பதிக்கு ஒரே ஒரு மகன் தான் இருந்தான். அவனையும் இழந்து விட்டதாக நோகேரா கண்ணீர் மல்க கூறினார். எனது மகன் சாவுக்கு பள்ளி ஆசிரியையே காரணம் என்றும் அவர் குற்றச்சாட்டு கூறினார்.

இதற்கிடையில், மாணவன் தற்கொலை குறித்து தனியார் பள்ளிக்கு சென்றும் சம்பிகேஹள்ளி போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது மாணவனை வகுப்பறையில் இருந்து ஆசிரியை வெளியே அனுப்பியதும், அங்கிருந்து தனது வீட்டுக்கே மோகின் வந்திருந்தான். பள்ளியில் மோகின் இல்லாதது பற்றி பெற்றோருக்கு தகவல் கொடுத்ததாக பள்ளி நிர்வாகம் போலீசாரிடம் தெரிவித்துள்ளது.

ஆசிரியை மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில், சக மாணவர்கள் முன்பாக தன்னை அவமானப்படுத்தியதால் பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த மோகின் சீருடையை கூட கழற்றாமல், ஆசிரியை திட்டியதை பற்றியே நினைத்து கொண்டு இருந்ததும், மாலையில் வீட்டின் அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்று 14-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததும் தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், காவலாளிகளிடமும் போலீசார் விசாரித்து தகவல்களை பெற்றுள்ளனர்.

மேலும் மாணவன் மோகினை தற்கொலைக்கு தூண்டியதாக கூறி தனியார் பள்ளி ஆசிரியை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சம்பிகேஹள்ளி போலீசார் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில் மாணவன் தற்கொலைக்கு முயன்ற போது குடியிருப்பில் வசித்தவர்கள், அவனை காப்பாற்ற முயலவில்லை என்றும், செல்போனில் வீடியோ எடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அடுக்குமாடி குடியிருப்புக்கு மாணவன் சென்றது எப்படி?

பெங்களூரு நாகவாரா அருகே வசிக்கும் மாணவன் மோகின் தனது வீட்டுக்கு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்திருந்தான். பொதுவாக அடுக்குமாடி குடியிருப்புக்குள் வெளியாட்கள் செல்ல அனுமதி கிடையாது. அப்படி இருக்கும் போது மாணவன் எப்படி உள்ளே சென்றான் என்று அக்கம்பக்கத்தினர் குற்றச்சாட்டு கூறினார். பள்ளிக்கு வந்த மோகின் தற்கொலை செய்ய முடிவு செய்து, சீருடையை கழற்றாமல் இருந்துள்ளான். அந்த குடியிருப்பில் வசிப்போரின் பிள்ளைகள் பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் போது, அவர்களுடன் சேர்ந்து மோகினும் சீருடையில் சென்றுள்ளான்.

மற்ற மாணவர்கள் போல் மோகினும் சென்றதால், காவலாளி கண்டுகொள்ளாமல் இருந்துள்ளார். இதுபற்றி காவலாளி, போலீசாரிடம் விளக்கம் அளித்துள்ளார். இதன் காரணமாக குடியிருப்புக்குள் வந்த மோகின் யாருக்கும் தெரியாமல் 14-வது மாடிக்கு ஏறி, அங்கிருந்து கீழே குதித்து தற்கொலை செய்தது தெரியவந்துள்ளது. காவலாளி மோகினை பிடித்து விசாரித்திருந்தால், இந்த சம்பவம் நடைபெறாமல் தவிர்த்திருக்கலாம் என்றும் அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர்.


Next Story