தனியார் நர்சிங் கல்லூரி மீது வழக்குப்பதிவு
இரவு உணவு சாப்பிட்ட 137 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்ட சம்பவத்தில் தனியார் நர்சிங் கல்லூரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மங்களூரு:-
137 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம்
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு சக்திநகர் பகுதியில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் மங்களூரு மட்டுமல்லாது வெளிமாவட்டம் மற்றும் கேரளாவை சேர்ந்த ஏராளமான மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 5-ந்தேதி இரவு விடுதியில் நெய் சாதம், சிக்கன் வழங்கப்பட்டது.
இந்த உணவை சாப்பிட்ட மாணவிகளுக்கு திடீரென்று வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து விடுதி ஊழியர்கள் வாந்தி, மயக்கம் ஏற்பட்ட மாணவிகளை மீட்டு மங்களூருவில் உள்ள வெவ்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டனர். மொத்தம் 137 மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது. மேலும் விடுதியில் இரவு வழங்கப்பட்ட உணவு விஷமாக மாறியதால் மாணவிகளுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது தெரியவந்தது.
14 பேரின் நிலை கவலைக்கிடம்
இதையடுத்து மாணவிகளுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர்களில் 14 மாணவிகளின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 14 மாணவிகளுக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சசிக்குமார் நேற்று முன்தினம் இரவு விடுதிக்கு சென்று பார்வையிட்டார். பின்னர் மாணவிகள் சிகிச்சை பெற்று வரும் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றும் விசாரணை நடத்தினார்.
மேலும் இதுபற்றி அறிந்ததும் மாணவிகளின் பெற்றோர்களும் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனர்.
வழக்குப்பதிவு
இந்த நிலையில் விடுதியில் மாணவிகளுக்கு தரமில்லாத உணவு வழங்கியதால் தான் அவர்களுக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும், நர்சிங் கல்லூரி மீதும் கல்லூரியின் விடுதி மீதும் கத்ரி போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பேரில் கத்ரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.