அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு: ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம் - சுப்ரீம் கோர்ட்டு
தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த சொத்து குவிப்பு வழக்கில் வரைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில் வாதிடப்பட்டது.
புதுடெல்லி,
கடந்த 2006-ம் ஆண்டு அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இருந்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவரது மனைவியை கீழ் கோர்ட்டு விடுவித்தது. இதற்கு எதிராக சென்னை ஐகோர்ட்டு, தாமாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்துள்ளது. இது தொடர்பான விசாரணைக்கு இடைக்கால தடைக்கோரி, தங்கம் தென்னரசு மற்றும் அவருடைய மனைவி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ரிஷிகேஷ் ராய், பிரசாந்த் குமார் மிஷ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 2-ந்தேதி விசாரித்தது. அப்போது இதே விவகாரம் தொடர்புடைய அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் மனுவை 5-ந்தேதி விசாரிப்பதால், இந்த மனுவையும் அன்றைய தேதியில் விசாரிக்க வேண்டும் என மூத்த வக்கீல் அபிஷேக் மனு சிங்வி வாதிட்டார்.
இதை ஏற்ற சுப்ரீம் கோர்ட்டு நிதிபதிகள், தங்கம் தென்னரசின் ரிட் மனுவை, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரனின் ரிட் மனுவுடன் இணைத்து 5-ந்தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த ரிட் மனுக்கள் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தரப்பில், "ஐகோர்ட்டு தனி நீதிபதி தாமாக முன்வந்து எடுத்த சொத்து குவிப்பு வழக்கில் வரைமுறைகள் பின்பற்றப்படவில்லை. தமிழ்நாட்டின் அமைச்சர்கள் மீதான வழக்குகளைத் தாமாக முன்வந்து விசாரணை நடத்துவதற்கு முன் அனுமதி கோரி தனி நீதிபதி எழுதிய கடிதத்தை தலைமை நீதிபதி பார்க்கும் முன்பே விசாரணையை தொடங்கி விட்டார் என்பது ஐகோர்ட்டு பதிவாளர் தாக்கல் செய்த அறிக்கையில் தெளிவாக உள்ளது. வரைமுறைகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனில் நீதிபதியின் உத்தரவுகளும் செல்லத்தக்கவையாக இருக்காது" என்று வாதிடப்பட்டது.
அதற்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள், "தனி நீதிபதி எம்.பி., எம்.எல்.ஏக்கள் மீதான ஊழல் வழக்குகளை விசாரிக்கும் ரோஸ்டர் நீதிபதியாக உள்ளார். எனவே தனி நீதிபதி, வழக்குகளை விசாரணைக்கு எடுத்ததில் என்ன தவறு? வழக்கு விசாரணையை தனது வரம்புகளுக்கு உட்பட்டு எடுக்கும்போது தலைமை நீதிபதியின் அனுமதி அவசியமா?" என்று கேள்வி எழுப்பினர்.
இந்த வழக்கு விசாரணை குறித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி முடிவெடுக்கலாம். வழக்குகளை தலைமை நீதிபதியே விசாரிக்கலாம் அல்லது வேறு அமர்வுக்கு மாற்றலாம். எதிர்காலத்தில் இந்த வழக்கு எந்த அமர்வில் விசாரித்தாலும் இந்த உத்தரவு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறினர்.