தலித் பெண்ணை தாக்கியதாக மந்திரி டி.சுதாகர் மீது வழக்கு
வீட்டை காலி செய்யும்படி கூறி தலித் பெண்ணை தாக்கியதாக கர்நாடக மந்திரி மந்திரி டி.சுதாகர் மீது வழக்குப்பதிவு செய்து எலகங்கா போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
பெங்களூரு:
கர்நாடகத்தில் திட்டமிடல் மற்றும் புள்ளியல் துறை மந்திரியாக இருந்து வருபவர் டி.சுதாகர். இவர், பெங்களூருவில் உள்ள ஒரு கட்டுமான நிறுவனத்தின் பங்குதாரராகவும் இருந்து வருகிறார். அந்த கட்டுமான நிறுவனம் எலகங்கா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நிலத்தை அபகரித்து இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
மந்திரி டி.சுதாகர் பங்குதாரராக இருக்கும் கட்டுமான நிறுவனம் அபகரித்ததாக கூறப்படும் பகுதியில் தலித் சமுதாயத்தை சேர்ந்த சுப்பம்மா என்பவர் வீடு கட்டி வசித்து வருகிறார். அந்த வீட்டை காலி செய்யும்படியும், அந்த நிலம் தங்களுக்கு சொந்தமானது என்றும் தனியார் கட்டுமான நிறுவனம் கூறி வந்துள்ளது இதுதொடர்பாக சுப்பம்மா, கட்டுமான நிறுவனத்தை சேர்ந்தவர்கள் மத்தியில் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில், எலகங்கா போலீஸ் நிலையத்தில் மந்திரி டி.சுதாகர் உள்பட 3 பேர் மீது சுப்பம்மா புகார் அளித்துள்ளார். அதில், மந்திரி டி.சுதாகர், தனது ஆதரவாளர்களுடன் வந்து என்னை சாதி பெயரை சொல்லி திட்டினார். என்னையும், எனது மகளையும் தாக்கினார். எங்களுக்கு சொந்தமான நிலத்தை அபகரித்து மோசடி செய்ததுடன், நாங்கள் வசிக்கும் வீட்டை கனரக வாகனம் மூலமாக இடித்து தள்ளி உள்ளனர். எனவே மந்திரி உள்ளிட்டோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுப்பம்மா கூறி இருந்தார்.
அந்த புகாரின் பேரில் மந்திரி டி.சுதாகர், சீனிவாஸ், பாக்கியம்மா ஆகிய 3 பேர் மீதும் எலகங்கா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மந்திரி டி.சுதாகரின் பெயர் 2-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த மந்திரி மீது வழக்குப்பதிவாகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.