சுயதொழில் செய்ய தலித் பெண்களுக்கு சரக்கு இருசக்கர வாகனம்; மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி பேச்சு
சுயதொழில் செய்ய தலித் பெண்களுக்கு சரக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படும் என்று சமூக நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி கூறியுள்ளார்.
பெங்களூரு:
ரூ.210 கோடி நிதி
சமூக நலன் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மந்திரி கோட்டா சீனிவாச பூஜாரி உடுப்பியில் இருந்தபடி நேற்று அனைத்து மாவட்டங்களை சேர்ந்த தனது துறை அதிகாரிகளுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில் அவர் பேசும்போது கூறியதாவது:-
சமூக நலத்துறை சார்பில் வேலைக்கு செல்லும் தலித், பழங்குடியின பெண்களுக்கு சுயதொழில் செய்ய மானிய விலையில் சரக்கு இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. இதற்கான பயனாளிகளை உடனடியாக தேர்வு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு ரூ.210 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. சட்டசபை தொகுதிகளுக்கு தலா 100 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருசக்கர வாகனம் வழங்கப்படும்.
துணி வியாபாரம்
மீன் விற்பனை, துணி வியாபாரம் போன்ற சுயதொழில் செய்ய இந்த இருசக்கர வாகனம் வழங்கப்படுகிறது. ஒரு இருக்கர வாகனத்தின் விலை ரூ.70 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் வங்கி கடன் பெற்று தரப்படும். பயனாளிகள் தங்களுக்கு பயன் கொடுக்கும் எந்த நிறுவனத்தின் வாகனத்தையும் தேர்ந்தெடுக்கலாம்.
இதுவரை 8 ஆயிரத்து 432 பேர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர். இன்னும் அதிகம் பேர் விண்ணப்பிக்க வேண்டும். இதுகுறித்து கிராம அளவில் தகுதியான மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உண்டு உறைவிட பள்ளிகளில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாக புகார்கள் வந்துள்ளன. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விடுதிகளுக்கு ஆய்வு செய்து மாணவர்களுக்கு தரமான உணவு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கோட்டா சீனிவாச பூஜாரி பேசினார்.
இந்த கூட்டத்தில் சமூக நலத்துறை செயலாளர் மணிவண்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.