கர்நாடகத்தில் கோர விபத்து: பெண்கள் உள்பட 13 பேர் பலி
சிக்பள்ளாப்பூர் அருகே நின்றிருந்த டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் ஆந்திர தொழிலாளர்கள் உள்பட 13 பேர் பலியானார்கள்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் சிக்பள்ளாப்பூர் (மாவட்டம்) தாலுகா சித்ராவதி அருகே ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திராவில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று காலை கார் ஒன்று வேகமாக வந்து கொண்டிருந்தது. அதில் டிரைவர் உள்பட 13 பேர் பயணித்தனர். இந்த நிலையில் கார் சித்ராவதி அருகே தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது, சாலையோரம் நின்றிருந்த டேங்கர் லாரி பின்புறம் கண்இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் காரின் முன்பகுதி அப்பளம் போல சுக்குநூறாக நொறுங்கியது. அத்துடன் காரில் இருந்தவர்கள் மரண ஓலமிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள், அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் விரைந்து வந்தனர்.
பின்னா் அவர்கள் காரில் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனாலும் இந்த கோர விபத்தில் காரில் இருந்த டிரைவர் உள்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். இதையடுத்து அவரை அந்தப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனா். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் சாவு எண்ணிக்கை 13 ஆக உயர்ந்தது.
இந்த விபத்து பற்றிய தகவல் அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நாகேஷ், உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் சிக்பள்ளாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் பலியான 12 பேரின் உடல்களையும், ஆஸ்பத்திரியில் உயிரிழந்த ஒருவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் 2 சிறுவர்கள், 3 பெண்கள் உள்பட 13 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. விபத்தில் பலியானவர்களின் பெயா் விவரம் முதலில் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் நடத்திய தீவிர விசாரணையில், உயிரிழந்தவர்களில் 12 பேரின் ெபயர் விவரம் போலீசாருக்கு கிடைத்துள்ளது. பலியானவர்களின் பெயா் விவரம் பின்வருமாறு:-
1. தொட்டப்பள்ளாப்புராவை சேர்ந்த நவீன்குமாரின் மனைவி அருணா (வயது 32)
2. அருணாவின் மகன் ரித்விக் (6)
3. பெங்களூரு காவல் பைரசந்திராவில் சலூன் கடையில் வேலை பார்த்து வந்த பாகேபள்ளியை சேர்ந்த நரசிம்மமூர்த்தி (37)
4. ஆந்திரா மாநிலம் கோரண்டலாவை சேர்ந்த நரசிம்மப்பா (40)
5. ஆந்திரா கொரண்டலபள்ளியை சேர்ந்த பெருமாள் பவன்குமார் (32)
6. பெங்களூரு காமாட்சி பாளையாவை சேர்ந்த சுப்பம்மா (66)
7. ஆந்திரா புட்டபர்த்தி மாவட்டம் பெனுகொண்டா மாவட்டம் கவுனிபெண்டா கிராமத்தை சேர்ந்த சாந்தம்மா (37)
8. சாந்தம்மாவின் மகன் ராஜவர்தன் (15)
9. பெங்களூரு எலகங்காவில் கூலி வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் மரகோரபள்ளியை சேர்ந்த நாராயணப்பா (50)
10. பெங்களூரு காமாட்சி பாளையாவில் நெசவு வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டத்தை சேர்ந்த வெங்கடரமணப்பா (51)
11. பெங்களூரு ஹொங்கசந்திராவில் பெயிண்டர் வேலை பார்த்து வந்த ஆந்திர மாநிலம் சத்யசாய் மாவட்டம் இந்துப்பூரை சேர்ந்த வெங்கடாத்ரி (32).
12. ெவங்கடாத்ரியின் மனைவி லட்சுமி (20)
விபத்தில் பலியான மற்றொருவரின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை.
விபத்தில் பலியானவர்கள் ஆந்திரா மாநிலம் மற்றும் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். அவர்கள் பெங்களூருவில் தங்கி கூலி வேலை பார்த்து வந்ததும், தசரா விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றுவிட்டு திரும்பி வந்தபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது தெரியவந்தது.
காலை நேரத்தில் கடும் பனிமூட்டம் காரணமாக சாலையோரம் நின்ற லாரி தெரியாததாலும், டிரைவர் காரை வேகமாக ஓட்டியதாலும் இந்த கோர விபத்து நடந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விபத்தால் ஐதராபாத்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விபத்துக்குள்ளான காரையும், லாரியையும் கிரேன் உதவியுடன் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்செய்தனர்.
பலியானவர்களின் உடல்கள் சிக்பள்ளாப்பூர் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் பலியானவர்களின் உறவினர்களுக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பிணவறை முன்பு கதறி அழுதது கல்நெஞ்சையும் உருக்குவதாக இருந்தது.
இந்த விபத்து பற்றி அறிந்ததும் சிக்பள்ளாப்பூர் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. பிரதீப் ஈஸ்வர், மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு நாகேஷ் ஆகியோர் அரசு ஆஸ்பத்திரிக்கு விரைந்து ெசன்று பார்வையிட்டனர். பின்னர் அவர்கள், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அந்த சமயத்தில் பிரதீப் ஈஸ்வர் எம்.எல்.ஏ.வுக்கு முதல்-மந்திரி சித்தராமையா போன் செய்து விவரங்களை கேட்டறிந்து கொண்டார்.
இந்த கோர விபத்து குறித்து சிக்பள்ளாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ெவவ்ேவறு பகுதிகளை சேர்ந்தவர்கள் பலியானது எப்படி?
சிக்பள்ளாப்பூர் அருகே நடந்த இந்த கோர விபத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பலியானவர்கள் அனைவரும் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர். ஆந்திரா மற்றும் சிக்பள்ளாப்பூரை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ஆந்திரா மாநிலம் கோரண்டலா பகுதியை சேர்ந்த கார் டிரைவர் நரசிம்மப்பா, ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு வரும் வழியில் டிக்கெட் முறையில் ஆட்களை ஏற்றி கொண்டு பெங்களூருவுக்கு வந்துள்ளார். அதாவது, ஆந்திராவில் இருந்து சிலரை ஏற்றி கொண்டு வந்த அவர், வரும் வழியில் சிக்பள்ளாப்பூர் மாவட்டத்திலும் சிலரை ஏற்றி கொண்டு பெங்களூருவுக்கு வந்துள்ளார். இந்த விபத்தில் டிரைவர் நரசிம்மப்பாவும் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றிய டிரைவர்
விபத்தில் சிக்கிய கார் ஆந்திர மாநில பதிவெண்ணை கொண்டதாகும். 7 பேர் மட்டுமே அமரக்கூடிய இந்த காரில், டிரைவர் நரசிம்மப்பா ஆந்திராவில் இருந்து பெங்களூருவுக்கு வரும் வழியில் 12 பேரை ஏற்றி கொண்டு வந்துள்ளார். பெங்களூருவில் தங்கி, ஆயத்த ஆடை மற்றும் கூலி வேலை பார்க்கும் பலர் நரசிம்மப்பாவின் காரில் பெங்களூருவுக்கு செல்ல ஏறி உள்ளனர். காருக்குள் அனைவரும் நெருக்கி அடித்தப்படி இருந்ததால், கார் விபத்தில் சிக்கியதும் அவர்கள் அனைவரும் நசுங்கி பலியானது தெரியவந்தது.
பலியானவர்கள் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்
சிக்பள்ளாப்பூரில் நடந்த விபத்து பற்றி அறிந்ததும் முதல்-மந்திரி சித்தராமையா, பலியானவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். ேமலும் அவர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டுவதாக தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசு சார்பில் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்றும் சித்தராமையா அறிவித்துள்ளார்.
கடும் பனிமூட்டத்தால் விபத்து
சிக்பள்ளாப்பூர் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலை நேரத்தில் வாகனங்கள் எச்சரிக்கையுடனும், மெதுவாகவும் ெசல்ல வேண்டும் என்று அதிகாரிகள் அறிவுறுத்தி வருகிறார்கள். நேற்றும் ஐதராபாத்-பெங்களூரு நெடுஞ்சாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் நிலவி உள்ளது. ஆனால் இதனை பொருட்படுத்தாமல் டிரைவர் நரசிம்மப்பா காரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி சென்றுள்ளார். அப்போது சித்ராவதி அருகே வந்தபோது பனிமூட்டம் காரணமாக சாைலயோரம் நின்றிருந்த லாரி தெரியாமல் பின்னால் வேகமாக மோதியது தெரியவந்தது.