ஜனநாயக கோவிலான நாடாளுமன்றம், விவாதம் நடத்தும் இடம், அமளியில் ஈடுபடும் இடமல்ல - துணை ஜனாதிபதி


ஜனநாயக கோவிலான நாடாளுமன்றம், விவாதம் நடத்தும் இடம், அமளியில் ஈடுபடும் இடமல்ல - துணை ஜனாதிபதி
x

ஜனநாயக கோவிலான நாடாளுமன்றம், விவாதம் நடத்தும் இடம், அமளியில் ஈடுபடும் இடமல்ல என்று துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் கூறினார்.

ஜனநாயக மாண்புகள்

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள சவுத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத மாநாடு நடந்தது. அதில், துணை ஜனாதிபதியும், மாநிலங்களவை தலைவருமான ஜெகதீப் தன்கர் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது:-

ஜனநாயக மாண்புகள் மிகவும் முக்கியம். நாம், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு மட்டுமல்ல, ஜனநாயகத்துக்கே தாய். எனவே, ஜனநாயக தத்துவங்கள் அழிக்கப்படுவதை அனுமதிக்க முடியாது.

அரசியல் சட்டத்தை உருவாக்கியவர்கள், முதல் 3 ஆண்டுகளில் முக்கியமான சிக்கல்களுக்கு தீர்வு கண்டனர். விவாதம், பேச்சுவார்த்தை, ஆலோசனை ஆகியவை மூலம்தான் தீர்வு கண்டனர்.

அமளி

ஒரு உறுப்பினர் கூட அரசியல் நிர்ணய சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் எழுப்பியது இல்லை. பதாகைகளை காண்பித்தது இல்லை. நாம் பின்பற்றத்தக்க வகையில் அவர்கள் நடந்து கொண்டனர். ஆனால் இன்று அதற்கு நேர்எதிராக நாடாளுமன்றத்தில் நடந்து கொள்கிறார்கள். இது மிகவும் கவலைக்குரியது. சபையின் கண்ணியத்தை பராமரிக்கும்வகையில் ஏதேனும் மருந்து தயாரிக்க வேண்டும்.

ஜனநாயக கோவில்களான நாடாளுமன்றம், சட்டசபைகளில் உறுப்பினர்களின் செயல்பாடுகள் முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவை விவாதம், ஆலோசனை நடத்தும் இடமே தவிர, அமளியில் ஈடுபடும் இடங்கள் அல்ல. எனவே, அமளி இருக்கக்கூடாது. அமளியில் ஈடுபடுபவரை கூண்டில் ஏற்றினால்தான் அமளியை நிறுத்துவார்கள். இதற்காக மக்கள் இயக்கம் உருவாக வேண்டும். அப்போது அவர்கள் புரிந்து கொள்வார்கள்.

'மைக்' அணைப்பா?

நமது இந்தியா, உலகிலேயே மிகவும் வளைந்து கொடுக்கக்கூடிய ஜனநாயக நாடு. நமது ஜனநாயகம் துடிப்பானது. கிராம பஞ்சாயத்து முதல் மத்திய அரசுவரை இ்ங்குபோல் எந்த நாட்டிலும் ஜனநாயகம் நிலவவில்லை.

இத்தகைய சூழ்நிலையில், ஒருவர் (ராகுல்காந்தி) ஏதோ ஒரு கருத்தை நிலைநாட்டுவதற்காக, இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசும்போது 'மைக்' அணைக்கப்படுவதாக கூறுகிறார். இதைவிட பெரிய பொய், உலகத்தில் இல்லை. மாநிலங்களவை தலைவர் என்ற முறையில், 'மைக்' அணைக்கப்படுவது இல்லை என்று உலகத்துக்கு சொல்ல வேண்டிய அரசியல் சட்ட கடமை எனக்கு இருக்கிறது. நெருக்கடி நிலை என்ற கருப்பு அத்தியாயம் ஒரு காலத்தில் இருந்தது. தற்போது அதற்கு வாய்ப்பு இல்லை.

இந்தியாவை இழிவுபடுத்துபவர்களிடம் அதே பாணியில் நடந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.


Next Story