வெறுமனே கோஷமிடுவதால் எந்த மாற்றமும் வந்து விடாது - ராகுல்காந்தி யாத்திரை குறித்து பாஜக பாய்ச்சல்


வெறுமனே கோஷமிடுவதால் எந்த மாற்றமும் வந்து விடாது - ராகுல்காந்தி யாத்திரை குறித்து பாஜக பாய்ச்சல்
x

வெறுமனே கோஷம் எழுப்புவதால், மக்களை முட்டாளாக்க முடியாது என்று ராகுல்காந்தி யாத்திரை குறித்து பாஜக கூறியுள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் 'பாரத நீதி பயணம்' என்ற 2-ம் கட்ட யாத்திரை நடத்தும் அறிவிப்பை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து பாஜக தேசிய செய்தித்தொடர்பாளர் நளின் கோலி கூறியதாவது:-

ராகுல்காந்தி, பிரிவினைக்கு ஆதரவானவர்களுடன் கைகோர்த்து நின்றவர். இந்திய விவகாரத்தில் வெளிநாடுகள் தலையிட கோரியவர். 2014-ம் ஆண்டில் இருந்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் வளர்ச்சியை எட்டச்செய்து பிரதமர் மோடி உண்மையான நீதியை வழங்கி வருகிறார். மக்கள் மீது அக்கறை இருப்பதால்தான் மோடியால் இதை செய்ய முடிகிறது.

வெறுமனே கோஷமிடுவதால் எந்த மாற்றமும் வந்து விடாது. வெறுமனே கோஷமிட்டு மக்களை முட்டாளாக்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களிடம் கூறியதாவது:-

1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல்லாண்டுகளாக நீதி வழங்காத காங்கிரஸ் கட்சி, வேறு யாருக்காவது நீதி வழங்குமா? சிறப்பு விசாரணை குழு அமைத்து, பிரதமர் மோடிதான் அவர்களுக்கு நீதி வழங்கினார். சிறு சிறு குழுவினரை சேர்த்துக்கொண்டு, மக்களை சாதி, பிராந்திய அடிப்படையில் பிரிப்பவர்கள் எப்படி நீதி வழங்குவார்கள்? இவ்வாறு அவர் கூறினார்.

மத்திய மந்திரி மீனாட்சி லேகி கூறும்போது, "பிரதமர் மோடிதான் அனைவருக்கும் வளர்ச்சியை எட்டச்செய்து ஒவ்வொருவருக்கும் நீதி வழங்கி வருகிறார். காங்கிரஸ் கட்சியோ, சமூக அநீதி உள்பட அனைத்துவகையான அநீதிகளையும் இழைத்தது.

தனது ஆட்சியின்போது, தனிப்பட்ட பழக்கவழக்கத்துக்காக, ஏராளமானோருக்கு வங்கிக்கடன்களை காங்கிரஸ் கட்சி வழங்கியது. அவை வாராக்கடன் ஆனது. ஆனால், பிரதமர் மோடி, கோடிக்கணக்கானோருக்கு வங்கிக்கணக்கு தொடங்கி, சமூக நீதிக்கு அடித்தளம் அமைத்தார்" என்று கூறினார்.


Next Story