'அஜித் பவார் அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்ய முடியாது' - மராட்டிய சட்டசபை சபாநாயகர்
அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என சபாநாயகர் ராகுல் நர்வேகார் தெரிவித்தார்.
மும்பை,
தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து அஜித் பவாரை, சரத் பவார் நீக்கினார். ஆனால் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அதிக எம்.எல்.ஏ.க்களை சரத் பவாரின் மருமகனான அஜித் பவார் தன் கைவசம் வைத்திருக்கிறார். இவர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜனதா கூட்டணி அரசில் இணைந்து துணை முதல்-மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருடன் தேசியவாத காங்கிரசை சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்கள் மந்திரிகளாக பதவியேற்றனர்.
இதனால் 53 எம்.எல்.ஏ.க்களை கொண்ட தேசியவாத காங்கிரஸ் கட்சி, சரத்பவார் மற்றும் அஜித்பவார் தலைமையில் 2 அணிகளாக செயல்பட்டு வந்தது. அஜித்பவார் அணிக்கு 41 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், சரத்பவார் தரப்புக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் மட்டும் ஆதரவு தெரிவித்தனர்.
இந்தநிலையில் அஜித்பவார் நாங்கள் தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என இந்திய தேர்தல் ஆணையத்தில் முறையிட்டார். கட்சியின் பெயர், சின்னத்தை தங்கள் தங்கள் அணிக்கு தர வேண்டும் என அவரது தரப்பு கோரியது. இதை எதிர்த்து சரத்பவார் தரப்பு பதில் மனு தாக்கல் செய்தது.
இருதரப்பு மனுக்களையும் விசாரித்த தேர்தல் ஆணையம், அஜித்பவார் அணி தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் என அறிவித்தது. கட்சியின் பெயர், கடிகாரம் சின்னம் ஆகியவை அஜித் பவார் அணிக்கே வழங்கப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்தது.
இதனால், மூத்த தலைவரான சரத் பவாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அதே சமயம் சரத் பவார் அணிக்கு 'தேசியவாத காங்கிரஸ் கட்சி - சரத்சந்திரபவார்' என்ற பெயர் வழங்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சரத் பவார் தரப்பு முறையிட்டுள்ளது.
இந்த நிலையில் அஜித் பவார் அணி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனுக்களை தள்ளுபடி செய்வதாக மராட்டிய மாநில சட்டசபை சபாநாயகர் ராகுல் நர்வேகார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை மேற்கோள் காட்டி பேசிய அவர், அஜித் பவார் அணியே உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும், 41 எம்.எல்.ஏ.க்களுடன் அஜித் பவார் அணியிடம் பெரும்பான்மை உள்ளது என்றும் தெரிவித்தார்.