10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை சபரிமலையில் உடனடி தரிசன முன்பதிவு ரத்து


தினத்தந்தி 3 Jan 2024 12:36 AM IST (Updated: 3 Jan 2024 12:37 AM IST)
t-max-icont-min-icon

சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூட்டம் அலைமோதி வருகிறது.

சபரிமலை,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகிறது. மகர விளக்கு பூஜை வருகிற 15-ந் தேதி நடக்கிறது. இதற்கிடையே சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கூட்டம் அலைமோதுகிறது.

இதனால் பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், உடனடி தரிசன முன்பதிவை நிறுத்தி வைக்கவும், வருகிற 14, 15-ந் தேதிகளில் ஆன்லைன் தரிசனத்திற்கான முன்பதிவு எண்ணிக்கையை குறைக்க வலியுறுத்தியும் பத்தனம்திட்டா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரசுக்கும், திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கும் கடிதம் எழுதி இருந்தார்.

இந்தநிலையில் நேற்று தேவஸ்தான மந்திரி ராதாகிருஷ்ணன் தலைமையில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேவஸ்தான தலைவர் பிரசாந்த், உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து தேவஸ்தான தலைவர் பிரசாந்த் கூறுகையில், "மகரவிளக்கையொட்டி பக்தர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் வருகிற 10-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை உடனடி தரிசன முன்பதிவு ரத்து செய்யப்படுகிறது. மேலும் 14-ந் தேதி தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவை 50 ஆயிரமாகவும், 15-ந் தேதி 40 ஆயிரமாகவும் குறைக்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. மேலும் இந்தநாட்களில் பெண்கள், குழந்தைகள் சபரிமலைக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.

மண்டல சீசனில் பக்தர்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு இந்த கட்டுப்பாடு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால் 16-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை ஆன்லைன் முன்பதிவு மற்றும் உடனடி தரிசன முன்பதிவு ஆகியவை வழக்கம்போல் எவ்வித கட்டுப்பாடும் இன்றி நடைபெறும்" என்று அவர் கூறினார்.


Next Story