கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த முடிவா?-புதிய தலைவர் பீமா நாயக் பதில்
கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதா? என்பது குறித்து பால் கூட்டமைப்பின் புதிய தலைவர் பீமாநாயக் பதில் அளித்துள்ளார்.
ஆடுகோடி:-
பால் விலை உயர்வா?
கர்நாடக பால் கூட்டமைப்பின் புதிய தலைவராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பீமாநாயக் எம்.எல்.ஏ. நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பெங்களூரு ஆடுகோடி பகுதியில் உள்ள கர்நாடக பால் கூட்டமைப்பு அலுவலகத்தில் நேற்று பதவி ஏற்றார். பின்னர் அவரிடம், மாநிலத்தில் பால் விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் பரவி வருவது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்குக பதிலளித்து பீமாநாயக் நிருபர்களிடம் கூறியதாவது:-
கர்நாடகத்தில் பால் விலையை உயர்த்த வேண்டும் என்று மாநிலத்தில் இருக்கும் அனைத்து பால் கூட்டமைப்புகளும் வலியுறுத்தி வருகிறது. குறிப்பாக ஒரு லிட்டர் பால் விலையை ரூ.5 உயர்த்த வேண்டும் என்று கர்நாடக பால் கூட்டமைப்புக்கு, மற்ற அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
பால் விலையை உயர்த்துவது பற்றி இன்னும் முடிவும் எடுக்கவில்லை. பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையாவுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும். மாநில மக்களுக்கு தரமான பால், தயிர் மற்றும் பால் பொருட்களை வழங்க பால் கூட்டமைப்பு சார்பில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
சித்தராமையா முடிவு எடுப்பார்
இதற்கிடையில், கூட்டுறவு துறை மந்திரி ராஜண்ணா நிருபர்களிடம் கூறுகையில், பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்-மந்திரி சித்தராமையா தான் முடிவு எடுப்பார். ஆனால் விவசாயிகளிடம் இருந்து ஒட்டு மொத்தமாக கொள்முதல் செய்யப்படும் பாலுக்காக வழங்கப்படும் விலையை உயர்த்தி கொடுக்க ஆலோசித்து வருகிறோம். பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு சரியான லாபம் கிடைக்க வேண்டும். விவசாயிகளின் நலன் கருதி, அவர்களிடம் இருந்து பெறப்படும் பாலுக்கான விலை அதிகரிக்கப்படும். இதுபற்றி முதல்-மந்திரி சித்தராமையாவுடன் விரிவாக ஆலோசித்து அறிவிக்கப்படும். விவசாயிகள் நலனை காப்பதில் காங்கிரஸ் எப்போதும் முன்னுரிமை அளித்தே வந்துள்ளது என்றார்.