மத்திய அரசை விமர்சித்து கேரள பா.ஜ.க.வினர் வெளியிட்ட பிரச்சார பாடல்
கேரள பா.ஜ.க. வெளியிட்ட பாடலில் மத்திய பா.ஜ.க. அரசை விமர்சிக்கும் வகையிலான வரிகள் இடம்பெற்றதால் சர்ச்சை ஏற்பட்டது.
திருவனந்தபுரம்,
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் நடத்தும் மாநிலம் தழுவிய பாதயாத்திரைக்காக கேரள பா.ஜ.க. சார்பில் ஒரு பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் பகிரப்பட்டது.
அந்த பாடலில், ஊழல் நிறைந்த மத்திய அரசுக்கு எதிராக போராட வருமாறு மக்களுக்கு அழைப்பு விடுக்கும் வகையில் வரிகள் இடம்பெற்றிருந்தன. மத்திய பா.ஜ.க. அரசை விமர்சிக்கும் வகையிலான வரிகள் அந்த பாடலில் இடம்பெற்றிருந்தது கேரள மாநில பா.ஜ.க.வினரிடையே சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அந்த பாடல் அக்கட்சியின் அதிகாரப்பூர்வ யூ-டியூப் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டது. ஆனால் அதற்குள் அந்த பாடல் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்த நிலையில், தொழில்நுட்ப பிரிவில் ஏற்பட்ட தவறு காரணமாக இந்த பாடல் வெளியானதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
முன்னதாக கேரள மாநில பா.ஜ.க. தலைவர் கே.சுரேந்திரன் தனது பாதயாத்திரையின்போது எஸ்.சி./எஸ்.டி. தலைவர்களுடன் மதிய உணவு சாப்பிடப்போவதாக போஸ்டர் ஒன்று வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து எஸ்.சி./எஸ்.டி. தலைவர்கள் கூறுகையில், கேரளாவில் இந்து சமுதாயத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் ஏழைப் பிரிவினருக்கு எதிரான பா.ஜ.க. மாநிலத் தலைமையின் மனப்பான்மையை இந்த போஸ்டர் வெளிப்படுத்தியுள்ளதாக விமர்சித்துள்ளனர்.