நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம், மிஸ்டர் மோடி...! நாங்கள் இந்தியா - ராகுல்காந்தி
26 கட்சிகளைக் கொண்ட இந்தியா எதிர்க்கட்சி கூட்டணியை பிரதமர் மோடி இன்று கிண்டல் செய்தார்.
புதுடெல்லி
இன்று காலை பா.ஜனதா கட்சி நாடாளுமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி,ஜே.பி.நட்டா மற்றும் பா.ஜனதா எம்.பி.க்கள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசும் போது
எதிர்க்கட்சிகள் திசை தெரியாமல் சென்று கொண்டிருக்கின்றனர். எதிர்க்கட்சிகள் கூட்டணி நீண்டநாட்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருக்க வேண்டுமென தீர்மானித்து விட்டனர். அது தான் அவர்களின் தலையெழுத்தாகவும் உள்ளது.
இதுபோன்ற ஒரு குறிக்கோள் அற்ற எதிர்க்கட்சிகளை பார்த்ததே இல்லை. அவர்கள் கூட்டணிக்கு "இந்தியா" என பெயர் வைத்துள்ளனர். ஆனால் பயங்கரவாத அமைப்பான இந்தியன் முஜாகிதீன் என்ற பெயரிலும் , கிழக்கிந்தியா கம்பெனி என்ற பெயரிலும் "இந்தியா" உள்ளது. மக்களை தவறாக வழிநடத்துவதற்கு நாட்டின் பெயரைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது. குறிக்கோளற்ற எதிர்கட்சிகளை பொருட்படுத்தவே தேவையில்லை என கூறினார்
அதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பதிலடி கொடுத்து உள்ளார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டரில் கூறி இருப்பதாவது:-
"நீங்கள் எங்களை எப்படி வேண்டுமானாலும் அழைக்கலாம் மிஸ்டர் மோடி. நாங்கள் இந்தியா"
மணிப்பூரை குணப்படுத்த நாங்கள் உதவுவோம்.அங்குள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் கண்ணீரை துடைப்போம்
மணிப்பூரில் அன்பு மற்றும் அமைதியை நாங்கள் மீண்டும் கொண்டுவருவோம்.
இந்தியாவின் அடிப்படை கொள்கைகளை மணிப்பூரில் மீண்டும் கட்டியெழுப்புவோம் என கூறி உள்ளார்.