நடப்பு சம்பா பருவத்தில் ரூ.1 லட்சம் கோடி உர மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்


நடப்பு சம்பா பருவத்தில் ரூ.1 லட்சம் கோடி உர மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல்
x

நடப்பு சம்பா பருவத்தில் ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி உர மானியம் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது.

புதுடெல்லி,

பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடைபெற்றது. அதில், நடப்பு சம்பா பருவத்தில் (ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை) ரூ.1 லட்சத்து 8 ஆயிரம் கோடி உர மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய உரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியதாவது:-

யூரியாவுக்கு ரூ.70 ஆயிரம் கோடி மானியமும், டி.ஏ.பி. மற்றும் இதர உரங்களுக்கு ரூ.38 ஆயிரம் கோடி மானியமும் அளிக்கப்படும். இந்த உரங்களின் சில்லறை விலை உயரக்கூடாது என்பதற்காக உரமானியம் அளிக்கப்படுகிறது.

எனவே, இவற்றின் அதிகபட்ச சில்லறை விலையில் மாற்றம் இருக்காது. இதனால், 12 கோடி விவசாயிகள் பலன் அடைவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

உற்பத்தியை ஊக்குவிக்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், கடந்த 2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. செல்போன் உற்பத்தியை பெருக்குவதற்காக, தகவல் தொழில்நுட்ப வன்பொருள் துறைக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டது.

தற்போது, அதிகமான செல்போன் உற்பத்தியில், உலகிலேயே இரண்டாவது இடத்தில் இந்தியா இருக்கிறது. இந்நிலையில், இரண்டாம் கட்டமாக, தகவல் தொழில் நுட்ப வன்பொருள் துறைக்கு உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்துக்கு (2.0) மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

இத்திட்டம் 6 ஆண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். இதற்கு ரூ.17 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு இருப்பதாக மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் நிருபர்களிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது:-

கம்ப்யூட்டர்கள், மடிக்கணினிகள், கையடக்க கணினிகள், சர்வர்கள், ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும். ரூ.3 லட்சத்து 35 ஆயிரம் கோடி மதிப்புள்ள உற்பத்தி நிகழும் என்று எதிர்பார்க்கிறோம்.

ரூ.2 ஆயிரத்து 430 கோடி முதலீடு கிடைக்கும் என்றும், 6 ஆண்டு காலத்தில் 75 ஆயிரம் பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும் கணித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story