எரிந்த நிலையில் வினாத்தாள்கள்... பறிமுதல் செய்யப்பட்ட காசோலைகள்: நீட் முறைகேட்டில் திடுக்கிடும் தகவல்கள்


எரிந்த நிலையில் வினாத்தாள்கள்... பறிமுதல் செய்யப்பட்ட காசோலைகள்: நீட் முறைகேட்டில் திடுக்கிடும் தகவல்கள்
x

கோப்புப்படம் 

பீகாரில் நீட் தேர்வு வினாத்தாள் கசியவிட்டவர்களுக்கு வழங்கப்பட்ட 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

பாட்னா,

இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு கடந்த மாதம் 5-ந் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வு முடிவுகள் கடந்த 4-ந் தேதி வெளியாகின. இந்த தேர்வு பெரும் சர்ச்சைகளுக்கு உள்ளாகி இருக்கிறது. எப்போதும் இல்லாத வகையில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றது, 1500-க்கும் மேற்பட்டோருக்கு கருணை மதிப்பெண் வழங்கியது, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்தது என பெரும் முறைகேடுகள் நடந்துள்ளன.

இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த வலியுறுத்தப்பட்டு வருகின்றன. மறுபுறம் இந்த மோசடிகளுக்கு எதிராக பல மாநிலங்களில் போலீசார் விசாரணை நடத்தி ஏராளமானோரை கைது செய்து வருகின்றனர்.

குறிப்பாக குஜராத்தின் கோத்ராவில் உள்ள பள்ளி ஒன்றில் அமைக்கப்பட்டு இருந்த தேர்வு மையத்தில் நடந்த முறைகேடு தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இந்த முறைகேட்டில் ரூ.2 கோடிக்கு மேல் கைமாறியிருப்பதும் கண்டறியப்பட்டு இருக்கிறது.

பீகாரில் வினாத்தாள் கசிய விடப்பட்ட விவகாரத்தை அந்த மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் 4 மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் உள்பட 13 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் மராட்டியம் மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த தலா ஒருவர் உள்பட மேலும் 9 மாணவர்களுக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளன. கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 35 மாணவ-மாணவிகளுக்கு தேர்வுக்கு முன்தினம் வினாத்தாள் மற்றும் விடைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதற்காக அவர்கள் அனைவரும் பாட்னாவில் உள்ள ராமகிருஷ்ணா நகரில் உள்ள ஒரு வாடகை இடத்துக்கு வரவழைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இவ்வாறு வினாத்தாள் மற்றும் விடைகள் பெறுவதற்காக ஒவ்வொரு மாணவரிடம் இருந்து தலா ரூ.30 லட்சம் வரை பெறப்பட்டு உள்ளன. இந்த வினாத்தாள் மற்றும் விடைகளை பாட்னாவில் உள்ள 'பாதுகாப்பு அறை' ஒன்றில் இருந்து எடுத்து வந்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பின்தேதியிட்ட 6 காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இவை வினாத்தாள் கசிய விட்டவர்களுக்கு வழங்கப்பட்டவை என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் அந்த பாதுகாப்பு அறையில் பாதி எரிந்த நிலையில் வினாத்தாள்கள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. அவற்றின் உண்மைத்தன்மையை அறிய குறிப்பு வினாத்தாளை தேசிய தேர்வு முகமையிடம் அதிகாரிகள் கேட்டுள்ளனர்.

அந்த வினாத்தாள் கிடைத்தவுடன், எரிந்த நிலையில் கிடைத்த வினாத்தாள்கள் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறினர். இவ்வாறு நீட் தேர்வு முறைகேடு விவகாரம் தொடர்பான விசாரணை பீகாரில் தீவிரம் அடைந்து இருக்கிறது.


Next Story