உணவுடன் சேர்த்து ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய எருமை மாடு!
மராட்டியத்தில் எருமை மாடு ஒன்று, வீட்டு உரிமையாளரின் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள தாலி செயினை விழுங்கிய சம்பவம் நடைபெற்றுள்ளது.
மும்பை,
மராட்டிய மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று தற்செயலாக விலையுயர்ந்த தங்க தாலி செயினை விழுங்கியது. மாடு விழுங்கிய தாலி செயினின் மதிப்பு ஒன்றரை லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
மாட்டின் உரிமையாளரான கீதாபாய் என்பவர், மாடுகளுக்கு தீவனம் கொடுப்பதற்காக வைக்கப்பட்டு இருந்த தட்டில் தனது தாலி செயினை கழற்றி வைத்துள்ளார்.
சில மணி நேரங்களுக்குப் பிறகுதான் செயின் காணாமல் போனதை உணர்ந்த அவர், செயினை எருமை மாடு உட்கொண்டதை அறிந்துள்ளார். உடனடியாக அவர் இதுகுறித்து தனது கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
பின்னர், இது தொடர்பாக உடனடியாக கால்நடை மருத்துவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் விரைந்து வந்த மருத்துவ குழுவினர், எருமை மாட்டின் வயிற்றை மெட்டல் டிடெக்டர் கொண்டு பரிசோதித்த போது, உள்ளே தங்க நகை இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் தங்க நகையை எருமை மாட்டின் வயிற்றிலிருந்து மருத்துவ குழுவினர் மீட்டனர். தொடர்ந்து எருமை மாட்டுக்கு 63 தையல்கள் போடப்பட்டது.
எருமை மாடு, தங்கச் சங்கிலியை விழுங்கி அது மீண்டும் மீட்கப்பட்ட தகவல் அப்பகுதி முழுவதும் பரவியது. இதனால், அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் எருமை மாட்டை ஆச்சரியத்துடன் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.